புதுடில்லி : 'அரசியலில், நிரந்தர எதிரிகள் கிடையாது. இன்று, எதிரிகளாக
இருக்கும் கட்சிகள், நாளை, நண்பர்களாகும் வாய்ப்புள்ளது. எனவே, பா.ஜ.,வும்,
காங்கிரசும் இணைந்து, டில்லியில் ஏன் ஆட்சி அமைக்க கூடாது?' என, சுப்ரீம்
கோர்ட், கேள்வி எழுப்பியுள்ளது. கோர்ட் அறிவுரையை ஏற்று, இரு கட்சிகளும்
இணைந்த அதிசய கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
டில்லியில், கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன், கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சி ஆட்சி அமைத்தது. டிசம்பர், 28ல், முதல்வராக, கெஜ்ரிவால் பதவியேற்றார்.
ராஜினாமா:
ஆனால், 'ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, காங்., - பா.ஜ., கட்சிகள் ஆதரவு தரவில்லை. இதனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை' என கூறிய கெஜ்ரிவால், இந்தாண்டு, பிப்ரவரியில், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் அமைச்சர்களும், ராஜினாமா செய்தனர். 48 நாட்கள் மட்டும், ஆம் ஆத்மி அரசு, ஆட்சியில் இருந்தது. இதையடுத்து, 'டில்லி சட்ட சபையை கலைத்து விட்டு, மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு, கெஜ்ரிவால் பரிந்துரைத்தார். இவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு, சட்டசபையை முடக்கி வைத்ததுடன், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் பரிந்துரைத்தது.இதை எதிர்த்து, கெஜ்ரிவால், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். அதில்,'டில்லி சட்டசபையை கலைக்காமல், முடக்கி வைத்துள்ளதன் மூலம், மத்திய அரசு, அங்கு, மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது; இது, சட்ட விரோதம். எனவே, டில்லி சட்டசபையை கலைத்து விட்டு, தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'மக்கள் நலன் கருதியே, டில்லி சட்டசபையை கலைக்கவில்லை. மிக குறுகிய காலத்தில், மீண்டும் ஒரு தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. பா.ஜ., ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக, கவர்னர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதை ஏற்று, சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்திருந்தது.
உதாரணம்:
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், ஆர்.எம்.லோதா, ரமணா ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என, பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் எதிர் கட்சிகளாக இருக்கும் இரண்டு கட்சிகள், மற்றொரு மாநிலத்தில், ஒரே கூட்டணியில் செயல்படுகின்றன. இன்று எதிரிகளாக இருக்கும் கட்சிகள், நாளை, நண்பர்களாகும் வாய்ப்புள்ளது. டில்லியில், சமீபகாலத்தில் நடந்த சம்பவங்களே, இதற்கு நல்ல உதாரணம்.டில்லி சட்டசபை தேர்தலில், காங்கிரசைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான, ஷீலா தீட்ஷித்தை, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடித்தார். ஆனால், அதே காங்கிரஸ் கட்சி தான், பின், கெஜ்ரிவால் முதல்வராவதற்கு ஆதரவு அளித்தது. புதிய ஆட்சி அமைந்ததும், ஜன லோக்பால் மசோதாவை சட்ட சபையில் நிறைவேற்றும் விஷயத்தில், காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, தன் எதிரி கட்சியான, பா.ஜ.,வுடன் கைகோர்த்த, காங்கிரஸ், அந்த மசோதாவை தோற்கடித்தது.இதன் மூலம், அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என்பது, தெளிவாகி விட்டது. முடியாதது என, எதுவும் இல்லை. காங்கிரசும், பா.ஜ.,வும், ஒரே கூட்டணியில் இணைந்து, டில்லியில் ஏன் ஆட்சி அமைக்க கூடாது? இதன்மூலம், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
'நோட்டீஸ்'
எனவே, காங்கிரசும், பா.ஜ.,வும், இது தொடர்பாக ஆலோசித்து, மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பாக, இரண்டு கட்சிகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பவும், இந்த கோர்ட் உத்தரவிடுகிறது.இவ்வாறு, நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
கோர்ட் உத்தரவை ஏற்று, டில்லியில், பா.ஜ.,வும், காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைத்தால், அது அதிசயமான கூட்டணியாகத் தான் இருக்கும் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், கோர்ட் உத்தரவை ஏற்று, டில்லியில், இந்த அதிசய கூட்டணியின் ஆட்சி அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Comments