பெங்களூரு சிறப்பு கோர்ட் மீது சென்னை ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும், பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் அணுகுமுறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு, விசாரணையில் உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், சென்னையைச் சேர்ந்த, 'லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ்' நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.


2000ல் மனு:

முடக்கத்தை நீக்கக் கோரி, சென்னை, சிறு வழக்குகள் கோர்ட்டில், அந்த நிறுவனம் சார்பில், 2000ல், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரிக்க, சிறு வழக்குகள் கோர்ட்டுக்கு உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, 'பெங்களூருக்கு, வழக்கு விசாரணை மாற்றப்பட்டதால், ஆவணங்களை, அங்கு, அனுப்ப வேண்டும். பெங்களூரு கோர்ட், லெக்ஸ் நிறுவனம், மனுத் தாக்கல் செய்தால், பிரதான வழக்கின் மீதான இறுதி விசாரணைக்கு முன், லெக்ஸ் நிறுவன மனுவை விசாரிக்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார். 2011ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 'உயர்நீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை' என, லெக்ஸ் நிறுவனத்தின் மனுவை, பெங்களூரு சிறப்பு கோர்ட், தள்ளுபடி செய்தது. மேலும், 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவுத் தொகையும் விதித்தது.

'பைசல்' உத்தரவு:

இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தெளிவுபடுத்தக் கோரி, லெக்ஸ் நிறுவனம் சார்பில், மீண்டும், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி ஆறுமுகசாமி பிறப்பித்த உத்தரவு: சொத்துகள் முடக்கத்தை நீக்கக் கோரி, சிறப்பு கோர்ட்டில், லெக்ஸ் நிறுவனம், மனுத் தாக்கல் செய்யலாம் என்றும், அவ்வாறு மனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில், பிரதான வழக்கை, இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன், லெக்ஸ் நிறுவனத்தின் மனுவை, பைசல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டது.

புறக்கணிக்க முடியாது:

பெங்களூரு சிறப்பு கோர்ட், சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் வரும் கோர்ட் அல்ல. அந்த கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தான், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், லெக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. எனவே, இந்த நீதிமன்றம் தெரிவித்த கருத்தை, பெங்களூரு சிறப்பு கோர்ட், புறக்கணித்து விட முடியாது. ஆனால், பெங்களூரு சிறப்பு கோர்ட், மனுவை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு செலவுத் தொகையும் விதித்து உள்ளது.

மரியாதை காட்டவில்லை:

எனவே, மனுதாரர் பாதிக்கப்பட்டால், கர்நாடகா, உயர் நீதிமன்றத்தை தான் அணுகி, நிவாரணம் தேட வேண்டும். இந்த நீதிமன்றம் தெரிவித்த கருத்தை, பெங்களூரு சிறப்பு கோர்ட் அணுகிய விதத்தில், என் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன். இந்த நீதிமன்றத்தின் கருத்துக்கு, சிறப்பு கோர்ட் உரிய மரியாதை காட்டவில்லை என்கிற உணர்வு தான் உள்ளது. இவ்வாறு, நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டு உள்ளார்.

Comments