பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க சோனியாவுக்கு உத்தரவு: சீக்கியர் வழக்கில் அமெரிக்க கோர்ட் கண்டிப்பு

புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம், 7ம் தேதிக்குள், பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்கும்படி, காங்., தலைவர் சோனியாவுக்கு, அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சீக்கியர் கொலை:
கடந்த, 1984ல், பிரதமராக இருந்த, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திரா, அவரின் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதையடுத்து, டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக, காங்கிரசார் தாக்குதல் நடத்தினர்; இதில், ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். சீக்கியர் படுகொலைகளில் தொடர்புடைய, காங்கிரஸ் தலைவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட, சோனியா, வாய்ப்பு அளித்ததாகவும், வழக்கிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காகவே, அவர், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், அவருக்கு எதிராக, அமெரிக்காவின், புரூக்ளின் பெடரல் கோர்ட்டில், அங்கு வசிக்கும் சீக்கியர்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல், எங்கு நடந்தாலும், அதுகுறித்து, அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தால், அங்குள்ள கோர்ட்டுகளில் விசாரணை நடத்தப்படும் நடைமுறை, அங்கு பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு, நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்கு, உடல்நல பரிசோதனைக்கு சென்ற போது, சோனியாவுக்கு, இந்த வழக்கு தொடர்பாக, 'சம்மன்' அளிக்கப்பட்டதாக, சீக்கிய அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'கடந்தாண்டு, நியூயார்க் நகரத்திற்கு சோனியா செல்லவில்லை. அவரிடம், நேரடியாக, எந்த சம்மனும் வழங்கப்படவில்லை. எனவே, அவருக்கு, சம்மன் அளிக்கப்பட்டதாக கூறுவது தவறு' என, சோனியா தரப்பில் கூறப்பட்டது. இதை எதிர்த்து, அமெரிக்க கோர்ட்டில், சீக்கிய அமைப்பு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'சோனியா, கடந்த, 2013, செப்டம்பர், 2 முதல், 12ம் தேதி வரையி லான காலத்தில், நியூயார்க்கில் உள்ள, 'மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங்' புற்றுநோய் மருத்துவமனைக்கு, பரிசோதனைக்காக வந்திருந்தார்; அப்போது, அவருக்கு, சம்மன் அளிக்கப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதி, பிரயன் கோகன், 'கடந்தாண்டு, குறிப்பிட்ட தேதியில், சோனியா, நியூயார்க்கில் இருந்தாரா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். எனவே, சோனியா, தன், பாஸ்போர்ட் நகலை, அடுத்த மாதம், 7ம் தேதிக்குள், கோர்ட்டில் தாக்கல் செய்து, இதை உறுதி செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

சட்டச்சிக்கல்:

லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், அமெரிக்க கோர்ட் பிறப்பித்துள்ள, இந்த உத்தரவால், சோனியாவுக்கு சட்டச் சிக்கல் ஏற்படும் என்றும், காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

பரிசோதனை:

நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, அடிக்கடி, வெளிநாட்டுக்கு சென்று வந்தது குறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இதற்கு முன் கேட்கப்பட்ட தகவல்களுக்கு, பதில் கிடைக்கவில்லை. 'தனிநபரின் விவகாரத்தில், தகவல் உரிமைச் சட்டம் செல்லாது' என, அப்போது கூறப்பட்டது. ஆனால், நியூயார்க்கில் உள்ள, புற்றுநோய் மருத்துவமனைக்கு, சோனியா சென்று உள்ளது, சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கின் மூலம், தற்போது தெரிய வந்துள்ளது.

கலவரத்தில் யாருக்கு தொடர்பு?

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி விட்டதாக, காங்., கட்சியின் மூத்த தலைவர்கள், சாஜன் குமார், கமல்நாத், ஜெகதீஷ் டைட்லர் ஆகியோருக்கு எதிராக, ஏற்கனவே, டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட, சோனியா, வாய்ப்பு அளித்ததாக கூறித் தான், சீக்கிய அமைப்புகள், அமெரிக்க கோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளன.

Comments