தமிழக அரசியல் திடு, திப் மாற்றம் ! பல யூகங்களுக்கு விடை கிடைக்கும் ?

சென்னை: தமிழகத்தில் அரசியல் கூட்டணி விவகாரம் பல்வேறு மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசியல்களம் புது, புது விதமாக காட்சியளிக்கப்போகிறது என்பதே இப்போதைய பேச்சு.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதில் இருந்தே கட்சிகள் யாருடன், யார் கூட்டு சேர்வது என்ற பேச்சு துவங்கி, இன்னும் முடிவு ஏற்படாமல் இருந்து வருகிறது.
தேர்தலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கூட்டணியில் தமிழகத்தில் எந்த அணியிலும் முழுமை அடையாமல் இருந்து வருகிறது.


அ.தி.மு.க,.வை பொறுத்தவரை, இந்த அணியில் இடதுசாரிகள் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தொகுதிகள் பங்கீடு மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக இந்த கட்சிகள் கேட்ட தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க., மறுத்து விட்டது. மொத்தம் 5 கேட்டதற்கு 2 சீட்டுக்கள் தருவோம் என்று கூறியுள்ளனர். இதனால் இடதுசாரிகள் இது குறித்து முக்கிய முடிவு எடுக்க மார்க்., கம்யூ., மற்றும், இந்திய கம்யூ., கட்சிகளின் அவசர கூட்டம் இன்று நடத்துகின்றன. இதில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தங்கள் நிலையை இடதுசாரிகள் அறிவிக்கலாம் என தெரிகிறது.

ஜனநாயக முற்போக்கு கூட்டணி: தி.மு.க,. கூட்டணியை பொறுத்தவரை இந்த அணிக்கு ஜனநாயக முற்போக்கு கூட்டணி என கருணாநிதி பெயர் சூட்டியுள்ளார். விடுதலைசிறுத்தைகள், புதியதமிழகம், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆகியன இடம் பெற்றுள்ளன. இன்னும் சில கட்சிகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டண்ட் நடிகர் : தே.மு.தி.க.,வை பொறுத்தவரை, இந்த கட்சியின் தலைவர் இன்னும் தெளிவு அடையவில்லை என்றே தோன்றுகிறது. யாருடன், கூட்டணி, யாருடன் பேச்சு என்பதில் எந்தவொரு வெளிப்படையான அறிவிப்பும், செயல்பாடும் தெரியவில்லை. மாநில, மற்றும் தேசிய கட்சிகளிடம் விஜயகாந்த் பல நிபந்தனைகளை முன்வைத்து வருவதால் எந்த கட்சியும் தே.மு.தி.க.,வுக்கு அனுசரணையாக போக முன்வர தயாராக இல்லை. இதனால் விஜயகாந்த் கருணாநிதி சொன்னது போல ஸ்டண்ட் நடிகர் என்பது தான் நினைவுக்கு வருகிறது. இந்த நிலை சினிமா போல மாயை ஆகிவிடும் என்பது விஜயகாந்த்துக்கு இன்னும் தெரியாமல் இருப்பதால் , இவரது நிலை தனித்து விடப்பட்டு விடுவாரோ என்றே தோன்றுகிறது. அதே நேரத்தில் விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார் என தான் நம்புவதாக கருணாநிதி கூறியதையும், இந்த கூட்டணி தொடர்பாக அழகிரி நீக்கப்பட்டதையும் மறப்பதற்கில்லை. இந்நிலையில், தி.மு,.க மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் நாளை காலை அறிவாலயத்தில் நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் அ.தி.மு.க,. அணியில் யாரும் இல்லாததால் இந்த கட்சி பா.ஜ.,வுக்கு போகலாம் என்றும் சில யூகங்கள் பேசப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் தமிழகத்தில் யாரும் கூட்டணி சேரும் நிலை என்ற பேச்சே இப்போதைக்கு இல்லை.

டில்லியில் பொன்ராதா: தமிழக பா.ஜ., தலைவர் பொன்ராதா கிருஷ்ணன் இன்று டில்லியில் முகாமிட்டு அகில இந்திய பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணியில் என்ன முடிவு எடுப்பது என்று முக்கிய கூட்டமாக இது கருதப்படுகிறது.

கூட்டணி தொடர்பாக இன்று தி.மு.க.,, இடதுசாரிகள், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் கூடி ஆலோசிப்பதால் இன்று நாளை என அடுத்தடுத்து, புதுப்புது மாற்றத்தை காண தமிழக அரசியல் களமும், மக்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Comments