பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி யில், தொகுதி பங்கீடு குறித்து
நேற்று பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. சென்னையில் நேற்று காலையில்,
பா.ம.க., குழுவினர், பா.ஜ., அலுவலகம் வந்து, சம்பிரதாயப்படி,
பேச்சுவார்த்தையை துவங்கினர். மாலையில், பா.ஜ., தலைவர்கள், தே.மு.தி.க.,
அலுவலகம் சென்று, கூட்டணியை உறுதி செய்தனர்.
காத்திருந்தன:
நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ., தலைமையிலான கூட்டணி முடிவாகி உள்ளது. தே.மு.தி.க., ஏற்படுத்திய தாமதத்தால், பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு செய்ய முடியாமல், பா.ஜ., தவித்து வந்தது. அழைப்புக்காக, பா.ம.க., - ம.தி.மு.க.,வும் காத்திருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், பா.ஜ., கூட்டணியில் சேர்வது என்ற முடிவை அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ., கூட்டணியில் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. டில்லியில் முகாமிட்டிருந்த, தமிழக பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர், அவசரமாக சென்னை வந்தனர். நேற்று காலை, பா.ம.க., குழுவினரை அழைத்து, தொகுதி உடன்பாடு குறித்து பேசினர்.இதற்காக, பா.ம.க., தலைவர், கோ.க.மணி தலைமையில், ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் உட்பட, ஆறு பேர் குழுவினர், நேற்று மதியம், கமலாலயம் சென்றனர். பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் அவர்களை வரவேற்று, முந்திரி பக்கோடாவும், காபியும் வழங்கி, உபசரித்தனர்.
இரு தரப்பு அறிமுகத்துக்கு பின், பொன்.ராதாகிருஷ்ண னும், கோ.க.மணியும் தனியாக பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, பா.ம.க.,வின் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க., தரப்பில், ம.தி.மு.க.,வை விட, பா.ம.க.,வுக்கு தொகுதிகளை குறைத்து விட வேண்டாம் எனவும், ராஜ்யசபா எம்.பி., பதவி ஒன்று வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, பா.ஜ., தலைவர்கள் அளித்த பதிலில், கூட்டணிக்கு முதலில் வந்த கட்சி என்ற அடிப்படையில், ம.தி.மு.க.,வுக்கு முக்கியத்துவம் உண்டு. அதேநேரத்தில், பா.ம.க.,வுக்கு அதன் ஓட்டு வங்கிக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என, உத்தரவாதம் அளித்துள்ளனர்.இதனால், திருப்தி அடைந்த பா.ம.க.,வினர், வரும் ஞாயிற்று கிழமை தங்கள் முடிவை அறிவித்து விடுவோம் எனக்கூறி, சென்றுள்ளனர். இந்த கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, எட்டு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கிடைக்கலாம் என, பா.ஜ.,வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நேற்று மாலையில், பா.ஜ., சார்பில், பொதுச் செயலர்கள் மோகன்ராஜுலு, வானதி சீனிவாசன், தேசிய செயலர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன், சரவண பெருமாள், கே.டி.ராகவன், ஆதவன், ஆசிம், முருகன் என, ஒன்பது பேர் கொண்ட குழுவினர், தே.மு.தி.க., அலுவலகம் சென்றனர்.தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதீஷ், சந்திரகுமார், உமாநாத், மோகன்ராஜ், முருகேசன், யுவராஜ், பாண்டியன், ஜாகீர் உசேன் உட்பட, ஒன்பது பேர் அடங்கிய நிர்வாகிகள், குழுவினரை சந்தித்துப் பேசினர். சமோசா, பிஸ்கெட், முந்திரி, ஸ்வீட், காபி வழங்கி உபசரித்தனர். ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின், தே.மு.தி.க., கேட்கும் தொகுதி கள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.
விளக்கம்:
பா.ஜ., கூட்டணியில், 14 லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி மற்றும் ஆலந்தூர் சட்டசபை தொகுதி ஆகியவற்றை தே.மு.தி.க., கேட்டுள்ளது. ஆனால், பா.ஜ., தரப்பில், 12 லோக்சபா, ஒரு ராஜ்யசபா மற்றும் ஆலந்தூர் சட்டசபை தொகுதி ஆகியவை வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள, 28 லோக்சபா தொகுதிகளை, பா.ம.க., - ம.தி.மு.க., - பா.ஜ., ஆகிய கட்சிகள், தலா எட்டு என, பிரித்துக் கொள்ளும் என்றும், மீதி நான்கை, என்.ஆர்.காங்கிரஸ் - ஐ.ஜே.கே., - கொ.ம.தே.க., - புதிய நீதி கட்சி ஆகியவைகளுக்குபங்கிடப்படும் எனவும், விளக்கம் தரப்பட்டுள்ளது.
பகிர்ந்து கொள்ளும்:
இதற்கு, தே.மு.தி.க., ஒப்புக்கொள்ளுமானால், இந்த, 'பார்முலா' செயலுக்கு வரும். இல்லையேல், தே.மு.தி.க.,வுக்கு, 13 ஆக உயரும்; ம.தி.மு.க.,வுக்கு ஏழாக குறையும் என்கிறது பா.ஜ., வட்டாரம். அப்படியொரு உடன்பாடு ஏற்பட்டால், பா.ம.க.,வுக்கான, எட்டு போக, மீதமுள்ள, 12 தொகுதிகளை, பா.ஜ., தன்னுடன் உள்ள கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நிலை வரும். அதில், என்.ஆர்.காங்கிரஸ் தவிர்த்து, ஐ.ஜே.கே., - கொ.ம.தே.க., - புதிய நீதி கட்சிகள், தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டியிருக்கும் என்றும், பா.ஜ., வட்டாரம் மேலும் தெரிவித்தது.
Comments