''எனக்கு, 68 வயதாகிறது. இனியும், தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக
பணியாற்றுவது என்பது சிரமமான காரியம்,'' என, மத்திய நிதி அமைச்சர்
சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும்,
காங்கிரஸ் வேட்பாளர், கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து, மத்திய நிதி
அமைச்சர் சிதம்பரம், திருமயத்தில் பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசின், 10 ஆண்டுகால ஆட்சியில், மக்கள் நலனுக்கான பல
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், 'இப்பகுதி மக்களுக்கு, நான்
ஒன்றும் செய்யவில்லை' என, முதல்வர் ஜெயலலிதா உண்மைக்கு புறம்பாக
பேசுகிறார். அவரை நான் குற்றம் சொல்லவில்லை. யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை
நன்றாக படிக்கிறார். வான்வழியாக செல்பவர்களுக்கு, மண்ணில் நடப்பது தெரிய
வாய்ப்பில்லை. தமிழ்மண்ணில் கால்பதிக்காத, ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்.
தோல்வி பயத்தால் தான், நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தவறு.
பைத்தியக்காரர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். எனக்கு, 68 வயதாகிறது.
இனியும் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றுவது என்பது சிரமமான
காரியம். அதனால் தான், என் மகனை தேர்தல் களத்தில் நிறுத்தியுள்ளேன்.
சிவகங்கை தொகுதியில், ஐந்துமுனை போட்டி நடப்பதற்காக யாரும் அஞ்ச வேண்டாம்.
நம் பாதை தெளிவாக உள்ளது. தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு,
சிதம்பரம் பேசினார்.
Comments