கடலூர்: அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து அ.தி.மு.,க
பொதுசெயலர் ஜெ., கடலூரில் இன்று 23ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) பேசுகையில், 2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது. கடலூரில்
பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, தானே புயல்
பாதிக்கப்பட்டபோது பல்வேறு நிவாரண பணிகளை எனது அரசு மேற்கொண்டது.
தி.மு.க.,
ஆட்சி காலத்தில் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை.பார்லி., தேர்தல்
ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்கான தேர்தல்.
வலிமையற்ற அரசை தூக்கி எறிந்து வலுவான ஆட்சியை மலர செய்ய வேண்டும். ஊழலற்ற
மக்களாட்சி அமைய வேண்டும். எதேச்சதிகாரத்திற்கு மக்கள் ஓட்டளிக்க கூடாது.
மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பது நமது இலக்கு. வெற்றி பெறுவோம். இந்த
வெற்றி பெற்று தாய் நாட்டை காப்பாற்றுவோம். கடந்த சட்டசபை தேர்தலில்
மாற்றம் ஏற்படுத்தி எங்களை ஆட்சியில் அமர்த்தினீர்கள், மாற்றம் தந்த
மக்களுக்கு ஏற்றம் தந்தது அ.தி.மு.,க அரசு அது போல நீங்கள் அ.தி.மு.க.,வை
ஆதரிக்க வேண்டும்.
என். எல்.சி., பங்கு நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட இருந்ததை
நான் தடுத்து நிறுத்தினேன். நாட்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக
இருந்த காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க., துணை போனது. ஆமாம்சாமி போட்டு
பக்கவாத்தியம் வாசித்தது.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும் போது அத்தியாவசிய பொருட்கள் விலை
உயரத்தான் செய்யும். இதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாய்
மூடி மவுனியாக இருந்தார் கருணாநிதி. இந்நிலையில், பெட்ரோல் விலை நிர்ணய
கொள்கை மாற்றி அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளனர்.
மத்திய அரசில் இருந்த போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கபட நாடகம்
போடுவதில் கருணாநிதியை யாரும் மிஞ்ச முடியாது.
சிறுபான்மை ஓட்டை பெறுவதற்காக , அயோத்திக்கு கரசேவகர்களை அ.தி.மு.க,
அனுப்பியது என பொய்யான குற்றச்சாட்டை கருணாநிதி வைத்துள்ளார். கோயபல்ஸ் போல
பொய் பரப்பி வருகிறார். ஆனால் பா.ஜ., அரசுடன் கூட்டணி வைத்து,
தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் அமைச்சர் பதவி பெற்றதை யாரும் மறக்கவில்லை.
மத்திய அரசின் தவறான கொள்கைளால் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி
உயர்ந்திருக்கிறது. உரக்கொள்கை வகுத்ததே தி.மு.க, தான். இதனால் உர விலை
உயர்ந்தது. சரக்கு கட்டணம் உயர்ந்துள்ளது. பல்வேறு சுமைகளில் இருந்து
விடுபட மாறுதல் வேண்டும்.
2 ஜிஊழல் , நிலக்கரி ஊழல்,
காமன்வெல்த் ஊழல் , விமானம் வாங்கியதில் ஊழல், என ஊழல் மயமாகிவிட்டது.
எனவே, வரும் தேர்தலில் மாற்றம் மூலம் பாரதம் ஏற்றம் காண அ.தி.மு.க.,வை
வெற்றி பெற செய்ய வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், விலைவாசியை
கட்டுக்குள் கொண்டு வரவும், தமிழர்கள் உரிமை காத்திடவும், இலங்கை தமிழர்
கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டணை வழங்கிடவும் ,தமிழ்மொழியை
ஆட்சி மொழியாக்கவும், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கிடவும் , ஊழலுக்கு
காரணமானவர்களுக்கு கோர்ட் மூலம் தண்டனை பெற்று தரவும், அ.தி.மு.க.,வை
வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு ஜெ., பேசினார்.
Comments