ஜனாதிபதி மறுப்பு தெரிவித்தும் அவசர சட்டம் குறித்து அமைச்சரவை இன்று முடிவு

புதுடில்லி : ஊழலுக்கு எதிரான 6 மசோதாக்கள், தெலுங்கானாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை அவசர சட்டமாக நிறைவேற்றுவது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூட உள்ளது. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மறுப்பு தெரிவித்திருந்து, அவரை சமாதானம் செய்து, அவசர சட்டத்தை கொண்டு வர காங்கிரஸ் அரசு கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.


கடைசி அமைச்சரவை கூட்டம் : 15வது லோக்சபா நிறைவடைந்ததாலும், தேர்தல் நெருங்கி வருவதாலும் தற்போதைய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று கூட உள்ளது. பார்லி., கூட்டத்தில் நிறைவேற்றப்படாமல் போன மசோதாக்கள் அவசர சட்டமாக கொண்டு வரப்படும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உறுதி அளித்தார். இதனை நிறைவேற்றுவதற்காகவும், தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதை மக்களிடம் காட்டி, ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்காகவும் ஊழலுக்கு எதிரான மசோக்களை அவசர சட்டமாக கொண்டு வர காங்கிரஸ் முயற்சி்த்து வருகிறது. இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டேவும், கபில்சிபிலும் நேற்று சந்தித்தனர். இருப்பினும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுத்த பிரணாப், புதிய அரசு பதவியேற்ற பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறினார். இந்நிலையில் இன்று கூடும் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா, கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், அந்தோனி, ஜெய்ராம் ரமேஷ், ஷிண்டே ஆகியோரை அறிவுறுத்தி உள்ளார். அமைச்சரவையின் முடிவிற்கு ஜனாதிபதி நிச்சயம் ஒப்புதல் தெரிவிப்பார் எனவும் காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கைவிட முடிவு :
பிப்ரவரி 28ம் தேதி கூடிய காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்திலேயே, அவசர சட்டம் கொண்டும் வரும் திட்டத்தை கைவிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து முடிவு செய்ய அமைச்சரவையை இன்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. பார்லி., கடைசி கூட்டத் தொடரில் பெரும்பாலான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தவறி விட்டது. இந்த மசோதாக்களில் 2 ஊழலுக்கு எதிரான திருத்தப்பட்ட மசோதா மற்றும் மக்களின் குறை தீர்ப்பதற்காக சேவைகள் உரிய நேரத்தில் பெறும் குடியுரிமை மசோதா, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, தெலுங்கானாவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் மசோதா ஆகியன ஆகும். இவற்றில் ஊழலுக்கு எதிரான மசோதாவும், குடியுரிமை மசோதாவும் ராகுலின் விருப்ப மசோதாக்கள் ஆகும்.

ஜனாதிபதி ஒப்புதல் : தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து, ஜனாதிபதி நேற்று கையெழுத்திட்டார். இதனால் சீமந்திரா பகுதி மக்களை கவருவதற்காக அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் புதிய சட்டத்தை அவசர சட்டமாக கொண்டு வர காங்., திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என பல தரப்பில் வலியுறுத்தப்பட்ட பின்னரும் அவசரமாக சட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டிய சூழலில் காங்., உள்ளதால் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவு திரும்ப பெறப்பட்டது. அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அமைச்சர்களைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், இணையமைச்சர் நாராயணசாமியும் ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.

தேசிய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இந்த அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டால், நடப்பு அரசின் செல்வாக்கு உயரும். இந்த முக்கிய மசோதாக்களே நாட்டின் அடுத்த அரசை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.

Comments