'அம்மா' என்பது பொது சொல்லா? ஆய்வு செய்கிறது தேர்தல் கமிஷன்

சென்னை: இலவசப் பொருட்கள் வினியோகத்தை நிறுத்தும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தேர்தல் கமிஷன், கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், இலவசமாக பொதுமக்களுக்கு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவது உட்பட, அனைத்து இலவசத் திட்டங்களையும் நிறுத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, கடிதம் எழுதப்பட்டுள்ளது.
'அம்மா' உணவகங்களில் உள்ள, முதல்வர் படத்தை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 'அம்மா' என்ற வார்த்தை, பொதுவான சொல் என, அ.தி.மு.க.,வினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு, கடிதம் எழுதி உள்ளோம். அவர்கள் எடுக்கும் முடிவு அமல்படுத்தப்படும். பஸ்களில் இலை இருப்பது, எம்.ஜி.ஆர்., சமாதி முன், குதிரை மீது இலை வடிவம் இருப்பது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு உள்ளது. இது குறித்தும், போலீஸ் டி.ஜி.பி., தொடர்பாகவும், தேர்தல் கமிஷனுக்கு, தகவல் தெரிவித்துள்ளோம். தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலில், 14 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டன. தற்போது, பதற்றமான ஓட்டுச் சாவடிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. கடந்த தேர்தலில், 75 சதவீதத்திற்கும் அதிகமாக, ஓட்டுப்பதிவு நடந்த, ஓட்டுச்சாவடிகள், ஒரே நபருக்கு, 75 சதவீதத்திற்கும் அதிகமாக ஓட்டுப்பதிவு நடந்த ஓட்டுச்சாவடிகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் போன்றவை, பதற்றமானவையாக அறிவிக்கப்படும். அங்கு கூடுதல், பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Comments