'எக்காரணத்தை கொண்டும் வேட்பாளர்களை மாற்ற மாட்டேன்' - ஜெயலலிதா உத்தரவாதம்

லோக்சபா தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், 'எக்காரணத்தை கொண்டும் வேட்பாளர்களை மாற்ற மாட்டேன்; தைரியமாக பிரசாரத்தில் ஈடுபடுங்கள்' என, அ.தி.மு.க., பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவாதம் அளித்துள்ளார்.


எல்லா கட்சிகளுக்கும் முன்னோடியாக, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த, முதல்வர் ஜெயலலிதா, 'கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவான பின், அ.தி.மு.க., வேட்பாளர்கள் திரும்ப பெறப்படுவார்கள்' என்றார்.இதனால், 'அந்த வாபஸ் வேட்பாளர், நானாக இருக்குமோ' என, அனைத்து வேட்பாளர்களுமே பீதியில் இருந்தனர்.பின், கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மார்ச், 3ல் பிரசாரத்தை ஜெயலலிதா துவக்கினார். பேச்சுவார்த்தை தோல்வி அடைய, 40 தொகுதி வேட்பாளர்களும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும், பயம் போகவில்லை. 'ஏதாவது புகார் அடிப்படையில், நீக்கி விடுவாரோ' என்ற பயத்துடனே பிரசாரம் மேற்கொண்டனர். இது, ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்றது.

இதைதொடர்ந்து, 'நால்வர் அணியை' அழைத்தஅவர், 'வேட்பாளர்களை தைரியமாக பிரசாரத்தில் ஈடுபட சொல்லுங்கள். எந்த புகார் வந்தாலும் மாற்ற மாட்டேன். ஏற்கனவே, உளவுத்துறை, நீங்கள், மாவட்ட செயலர்கள் கொடுத்த தகவலின்படி, வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். வேண்டுமானால், அவர்களுக்கு கடிதம் கூட எழுத தயாராக இருக்கிறேன்' என, தெரிவித்துள்ளார். இதை அறிந்த வேட்பாளர்கள் உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு தேர்தலிலும், சில வேட்பாளர்களை மாற்றுவது, ஜெயலலிதாவின் வாடிக்கை. ஆனால், இம்முறை வேட்பாளர்களை, அவரே நேரில் விசாரித்து, தேர்வு செய்தார். 40தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதால், எப்படியும் வெற்றி பெற வேண்டும். மத்தியில் தன் பங்கு இருக்க வேண்டும் என, நினைக்கிறார்.

இச்சூழலில் வேட்பாளர்களை மாற்றினால், அது பிரசாரத்தை பாதிக்கும். எதிர்க்கட்சிகளின், பிரசாரத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் எனக்கருதியே, 'வேட்பாளர் மாற்றமில்லை' என, உத்தரவாதம் அளித்துள்ளார். இவ்வாறு, கட்சி நிர்வாகி கூறினார்.

Comments