'பிரதமர் பதவியை கைப்பற்றுவதே லட்சியம்' என்ற
திட்டத்துடன், அ.தி.மு.க., தலைமை தேர்தல் பணியை துவங்கியுள்ளது. வேட்பாளர்
அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியவற்றையும், மற்ற கட்சிகளுக்கு
முன்னதாக முடித்துள்ளது.
பிரசாரம் துவக்கம்:
அ.தி.மு.க.,
வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான
ஜெயலலிதா, வரும், 3ம் தேதி காஞ்சிபுரத்தில், பிரசாரத்தையும் துவக்க
உள்ளார். அதேநேரத்தில், தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள், கூட்டணிக்கு
அழைப்பு மேல் அழைப்பு விடுத்தும், அதற்கு உறுதியான பதில் எதையும்
சொல்லாமல், லாப நஷ்ட கணக்கு பார்த்து வரும், தங்களின் எதிரி கட்சியான,
விஜயகாந்தின் தே.மு.தி.க., விற்கும், வேறு சில கட்சிகளுக்கும் சரியான பாடம்
புகட்டவும், அ.தி.மு.க., மேலிடம் தீர்மானித்துள்ளது.
ஆபரேஷன் துவங்கலாம்:
இதன்
முதல் கட்டமாகவே, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண்
சுப்பிரமணியன், அணைக்கட்டு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., கலையரசு ஆகியோர்,
சமீபத்தில் முதல்வரை சந்தித்து, தங்களை அ.தி.மு.க., ஆதரவாளர்களாக மாற்றிக்
கொண்டனர் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தே.மு.தி.க.,விலிருந்து, மேலும்
பலரை இழுக்கும் ஆபரேஷன் துவங்கலாம் என, நம்பப்படுகிறது. இப்படி ஆட்களை
இழுத்து வரும் பொறுப்பு, பண்ருட்டி ராமச்சந்திரனிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட ஆள் இழுப்பை
வெற்றிகரமாக முடித்துள்ள அவர், இரண்டாம் கட்ட ஆள் இழுப்புக்கான வேலைகளில்,
தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. இப்படி தொடர்ச்சியாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை
இழுப்பதன் மூலம், விஜயகாந்தின் அரசியல் செல்வாக்கை குறைக்கவும், மக்களிடம்
அவருக்கு உள்ள செல்வாக்கை முறியடிக்கவும், அத்துடன் விஜயகாந்த்
கூட்டணிக்காக அலையும் கட்சிகளுக்கு கலக்கத்தை உண்டாக்கவும் அ.தி.மு.க.,
மேலிடம் திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில், விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி
சேரும் கட்சியினர், 'ஏண்டா அவருடன் கூட்டணி சேர்ந்தோம்' என, லோக்சபா
தேர்தலுக்குப் பின் நோக வேண்டும். அதுவே தங்களின் லட்சியம் என, அ.தி.மு.க.,
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைதியற்ற நிலை:
மேலும்,
இந்த ஆள் இழுப்பு நடவடிக்கையில் ஈடுபடும், முக்கிய புள்ளிகள்,
தே.மு.தி.க.,வினரிடம், 'கடந்த பல மாதங்களாக, உங்கள் கட்சித் தலைமையின்
செயல்பாடு காரணமாக, நீங்கள் அமைதியற்ற நிலையில் உள்ளீர்கள். எனவே, மன அமைதி
தேவையெனில், அ.தி.மு.க., பக்கம் தாவுங்கள். 'மேலும், தே.மு.தி.க.,
வளர்ச்சிக்காக, சொந்த நிதியை செலவு செய்த நீங்கள், இப்போது வரை, அந்தப்
பணத்தை மீட்க முடியாத நிலையில், சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ளீர்கள்.
நாங்கள் சொல்வதை கேட்டால், நீங்கள் இழந்த பணத்தை மீட்பதோடு,
செல்வாக்கையும், பெருக்கிக் கொள்ளலாம். யோசித்து முடிவெடுங்கள்' என,
ஆசைவார்த்தை கூறி அழைப்பு விடுப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.,வின் இந்த
ஆபரேஷனில், எத்தனை பேர் சிக்கப் போகின்றனர் என்பது, அடுத்த சில நாட்களில்
தெரிந்து விடும்.
Comments