புதுடில்லி: கேரள மாநில கவர்னராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, டில்லி
முன்னாள் முதல்வர், ஷீலா தீட்ஷித், 75, இப்போதைய கவர்னர்,
நிகில்குமாருக்கு, 72, பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். டில்லியில், 1998
முதல், 2013 வரை, தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா, கடந்த
ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், "ஆம் ஆத்மி' கட்சித் தலைவர்,
அரவிந்த் கெஜ்ரிவாலிடம், 22 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
அடைந்தார்.
அதன் பின், தீவிர அரசியலில் ஒதுங்கியிருந்த அவருக்கு, பிரதமர்,
மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கேரள கவர்னர்
பதவியை வழங்கியுள்ளது.ஷீலா பெயர் அறிவிக்கப்பட்டதும், கவர்னர் பதவியை ராஜினாமா செய்த நிகில்குமார், கடிதத்தை, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தார். டில்லி, முன்னாள் போலீஸ் கமிஷனரான நிகில், 2013, மார்ச் முதல், கேரள கவர்னராக இருந்து வந்தார். ஜனாதிபதி, கவர்னர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள், அரசியல் சார்பற்று, நடுநிலையானவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. எனினும், அதை, காற்றில் பறக்கவிடும் மத்திய அரசு, நேற்று வரை, டில்லி முதல்வராக இருந்த, காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஷீலாவை, கேரள கவர்னராக நியமித்துள்ளது, பலதரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments