தஞ்சை லோக்சபா தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திருவையாறு
தேரடியில் இன்று ( 21 ம் தேதி வெள்ளிக்கிழமை ) ஸ்டாலின் வேனில்
வந்தடைந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஒன்றிய செயலாளருமான துரை
சந்திரசேகரன், நகர செயலாளர் நாகராஜன் வரவேற்றனர்.
தொடர்ந்து, ஸ்டாலின் பேசியதாவது;
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஜெ., ஆட்சியில் விலைவாசி கடுமையாக
உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது. கொலை,
கொள்ளை, கற்பழிப்புக்கு பெண்கள் ஆளாகி வருகின்றனர். தைரியமாக வெளியில்
நடமாட முடியவில்லை. திருவையாறு சட்டசபை தொகுதியில், குடமுருட்டி, கொள்ளிடம்
ஆற்றில், 51 கோடி ரூபாயில் புதிய பாலங்கள், கடந்த தி.மு.க., ஆட்சியில்
கட்டப்பட்டுள்ளன. இதுதவிர, திருவையாறில் அரசு மருத்துவமனை, புதிய பஸ்
ஸ்டாண்ட், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், திருவையாறு, மருதூர், தோகூர்
போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய கட்டிடம் என, பலவற்றை தி.மு.க., ஆட்சியின்
சாதனைகள் என, கூறலாம்.
மேலும், 8 உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாகவும், 3 நடுநிலைப்பள்ளி
உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, தி.மு.க.,வின்
சாதனைகளை கூறிக்கொண்டே போகலாம். ஆனால், கடந்த 3 ஆண்டுகால அ..தி.மு.க.,
ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா என்ன செய்தார்? என, ஏதாவது ஒரு சாதனையை கூற
முடியுமா? சாதனைகளே இல்லாத ஆட்சி ஜெ.,வின் ஆட்சி.தி.மு.க., தலைவர்
கருணாநிதியும், நானும் மக்களை சந்திக்க தேர்தல் நேரம் என்றாலும், பிற நேரம்
என்றாலும் எப்போதும் தயக்கமின்றி வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும்,
இல்லாவிட்டாலும் கருணாநிதியை நேரில் சந்திக்க முடியும். ஆனால், வானத்தில்
ஹெலிகாப்டரில் ஜெ., செல்வதற்காக, தரையில் போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
அம்மா, சும்மா தண்ணீர் தரவில்லை. நாட்டிலேயே
பிற மாநிலத்தில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் தண்ணீரை மக்களுக்கு,
அரசே விலைக்கு விற்கும் வெட்கக்கேடு நடக்கிறது. உலகிலேயே தண்ணீரை விலைக்கு
விற்கும் அவலம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய
வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
Comments