மோடியை சந்திக்க சென்று மூக்குடைபட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி: முன் அனுமதி பெறாமல், தன்னை சந்திக்க வந்த, 'ஆம் ஆத்மி' தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, நேற்று, தக்க பாடம் புகட்டினார். மோடியை சந்திக்க முடியாமல், ராஜஸ்தான் மாநிலத்துக்கு, மூட்டையை கட்டினார் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், மூன்று நாட்களாக, முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.



ஆய்வு:

'மோடியின் ஆட்சியில், குஜராத் மாநிலம், உண்மையிலேயே, வளர்ச்சி அடைந்துள்ளதா?' என, ஆய்வு செய்யப் போவதாக, தெரிவித்திருந்தார். ஆனால், அங்குள்ள கிராம மக்கள், 'குஜராத் மாநிலத்துக்கு எதிரான கெஜ்ரிவாலே திரும்பி போ' என, கறுப்பு கொடி காட்டி, எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், முதல்வர் மோடியை சந்தித்து, 'ரிலை யன்ஸ்' நிறுவனத்தின் எரிவாயு விவகாரம் தொடர்பாகவும், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாகவும், 16 கேள்விகளை கேட்க போவதாக, கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதற்காக, மோடியின் வீடு உள்ள, காந்திநகருக்கு, நேற்று காலை, தன் ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்றார். நகரின் நுழைவாயிலேயே, போலீசார், அவர்களை தடுத்தி நிறுத்தினர். 'முன் அனுமதி இல்லாமல், முதல்வரை சந்திக்க முடியாது. முறையாக அனுமதி பெற்று, சந்தியுங்கள்' என, போலீசார், தெரிவித்தனர்.இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான, மணீஷ் சிசோடியாவை மட்டும், மோடியின் வீட்டுக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்.அங்கிருந்த, முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம், முதல்வர் மோடியை சந்திப்பதற்கு, அவர், எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரினார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து, இதுகுறித்து பதில் அளிப்பதாக கூறி, சிசோடியாவை, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.இதனால், கெஜ்ரிவாலும், அவரின் ஆதரவாளர்களும், முதல்வரை சந்திக்க முடியாமல், ராஜஸ்தான் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து, பா.ஜ., கட்சியினர் கூறுகையில், 'ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரை, முறையான முன் அனுமதி இல்லாமல், எப்படி சந்திக்க முடியும்? டில்லி முதல்வராக பதவி வகித்த கெஜ்ரிவாலுக்கு, இது கூடவா தெரியாது' என, கோபத்துடன் தெரிவித்தனர்.
டில்லி போலீஸ் எச்சரிக்கை:

இதுகுறித்து, டில்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:சமீபத்தில், கெஜ்ரிவால் குஜராத் சென்றிருந்தபோது, கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால், ஆத்திரம் அடைந்த ஆம் ஆத்மி கட்சியினர், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு, ஆவேசத்துடன், கும்பலாக திரண்டு வந்தனர். போலீசார், அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தனர்.அதை ஏற்க மறுத்த அவர்கள், பா.ஜ., அலுவலகத்துக்குள் கற்களை வீசி தாக்கியதுடன், சுவரிலும் ஏறினர்; கோஷங்களையும் எழுப்பினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.சட்டத்துக்கு புறம்பாக கூடியதுடன், போலீசாரையும் பணி செய்யவிடாமல் தடுத்தனர். ஆம் ஆத்மி கட்சியினரின் நடவடிக்கையால், அந்த இடம், வன்முறை களமாக மாறியது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments