'அ.தி.மு.க., கூட்டணியால் வேதனைப்பட்ட வாஜ்பாய்': கருணாநிதி

சென்னை: 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இருந்த காலம் தான், தன் அரசியல் வாழ்க்கையில் வேதனையான காலம் என, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வர்ணித்தார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'தி.மு.க., மத்திய ஆட்சியில், அங்கம் வகித்த போது, என்ன செய்தனர்' என, கூட்டத்திற்கு கூட்டம், முதல்வர் ஜெயலலிதா கேட்கிறார்.
நாங்கள் உங்களைப் போல இப்படியெல்லாம், மத்திய அரசிடம் கேட்கவில்லை தான். ஆனால், தமிழகத்திற்கு தேவையான சேது சமுத்திர திட்டத்தைக் கேட்டுப் பெற்றோம். தமிழ் மொழிக்கு, செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தோம். சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை பெற்றோம். சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்தோம். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கேட்டு பெற்றோம். கடல் சார் தேசியப் பல்கலைக்கழகம் கிடைத்தது. இப்படி எண்ணற்ற திட்டங்களையெல்லாம் பெற்றுத் தந்தோம். இப்போதாவது உண்மை புரிகிறதா? ஒரு மத்திய ஆட்சியை எந்த அளவுக்கு சித்ரவதை செய்தீர்கள்? கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகிய நாளை, பிரதமராக இருந்த வாஜ்பாய் மனம் வெதும்பி, 'நிம்மதியோடு இன்றிரவு தூங்குவேன்' என்றார். 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இருந்த காலம் தான், தன் அரசியல் வாழ்க்கையில் மிகவும் வேதனையான காலம்' என, வர்ணித்தார். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Comments