350 வழக்குகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் ! போலீசார் கைது செய்வார்களா ?

தூத்துக்குடி: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 3 பேர் மீதும் 350 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இத்தனை நாட்களும் அவர்கள் எங்கே பதுங்கி இருக்கின்றனர் என்பது வெளியே தெரிந்தும் தெரியாதது போலவே இருந்து வருகிறது.
இதற்கிடையில் தேர்தலில் போட்டியிடவிருப்பதால் 3 பேரும் வெளி உலகிற்கு வந்தாக வேண்டும். இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவார்களா அல்லது, அரசியல் ரீதியான லாப நஷ்டங்களை கருத்தில் கொண்டு கைது நடவடிக்கை தவிர்க்கப்படுமா என்ற பரபரப்பு பேச்சு நிலவுகிறது.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் கன்னியாகுமரி ( உதயகுமார்), நெல்லை ( மைபா. ஜேசுராஜ்), தூத்துக்குடி ( புஷ்பராயன்), ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் இந்த கட்சி பிரமுகர்கள் இறங்கியுள்ளனர். இவர்கள் வரும் 29 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

இந்த 3பேரை பொறுத்தவரை கூடங்குளம் அணுமின்நிலை எதிர்ப்பு போராட்டத்தை முன் நின்று நடத்தியர்வகள் ஆவர். இந்த போராட்ட காலத்தின் போது இவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு, மற்றும் தேச விரோத நடவடிக்கை என பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் இதுவரை இவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. காரணம் மீனவ கிராமங்களில் போலீசார் நுழைய முடியாமல் இருந்து வந்தனர். இதனால் 3 பேரும் இது வரை வெளியே வெளிப்படையாக வந்தது இல்லை. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தே ஆக வேண்டும். இதனால் போலீசார் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று 3 மாவட்ட மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

13 கடலோர மாவட்டங்கள் கூடி விவாதிப்போம்: தூத்துக்குடியில் ஆம் ஆத்மி தேர்தல் பணிக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பணிக்குழுவை சேர்ந்த சுபாஷ் பெர்ணான்டோ கூறுகையில் : தூத்துக்குடியில் புஷ்பராயன் மார்ச் 29 ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வேட்பாளர் அறிவிப்பு செய்வார் என்றார்.

தொடர்ந்து நிருபர்கள் கேள்விக்கு அவர் பதில் தெரிவித்ததாவது:

* ஆம் ஆத்மி வேட்பாளர்கள மீது போலீசார் கைது நடவடிக்கை எடுத்தாலோ, வேட்புமனுவை தள்ளுபடி செய்தால், மாற்று வேட்பாளர் நிறுத்த வாய்ப்புள்ளதா?

பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்த ஆ.ராஜா நீலகிரி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, எங்கள் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை.

* அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்?

தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களை கூட்டி ஆலோசனை செய்து மாற்று வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். அப்போது இதன் எதிரொலி 40 தொகுதிகளிலும் பிரதிபலிக்கும்.

கட்சி அலுவலகத்திற்கு போலீசார் தடை ; தூத்துக்குடியில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இக் கட்சியின் தேர்தல் அலுவலகம் பீச் ரோட்டில் இன்று (மார்ச் 22) காலை 10.30 மணிக்கு திறக்கப்படும், என அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் தென்பாகம் போலீசார் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் திறக்க அனுமதி பெற வில்லை. இந்த பகுதியில் கட்சி அலுவலகம் திறந்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும், என தெரிவித்து, கட்சி அலுவலகம் திறக்க தடை செய்யப்பட்டது.

அனுமதி தேவை இல்லை:இது குறித்து ஆம் ஆத்மி தேர்தல் பணிக்குழுவை சேர்ந்த சுபாஷ் பெர்ணான்டோ கூறியதாவது: தேர்தல் கமிஷன் நடத்தை விதிகளின் படி பொது இடங்களில் பொதுக்கூட்டம், பிரசாரம் செய்ய மட்டுமே அனுமதி பெற வேண்டும். தேர்தல் அலுவலகத்திற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இந் நிலையில் போலீசார் தடை விதித்துள்ளது கண்டனத்திற்கு உரியது. தூத்துக்குடியில் புஷ்பராயன் வெற்றி பெற்று விடுவார் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக ஆதிக்க சக்திகளின் துணையோடு போலீசார் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தேர்தல் கமிஷனிடம் புகார்: இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது. டெல்லியில் பிரசாந்த்பூஷன் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார், என்று கூறினார்.

Comments