புதுடில்லி : இந்தியாவில் 1977ம் ஆண்டிற்கு பிறகு, தற்போது
முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் லோக்சபா
தேர்தலை இந்தியா மட்டுமின்றி உலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்து
காத்திருக்கிறது. இந்திய லோக்சபா தேர்தல் குறித்து தி நியூயார்க் டைம்ஸ்
பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தேசிய தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி துவங்கி, 9 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. மே 12ம் தேதி வரை நடத்தப்படும் இந்த தேர்தலின் முடிவுகள் மே 16ம் தேதி வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், உலகிலேயே அதிகபட்சமாக 81.4 கோடி தகுதி பெற்ற வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இந்த 81.4 கோடி வாக்காளர்கள் ஒன்றிணைந்து பார்லிமென்ட்டின் கீழ்சபைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 1977ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவின் மிக முக்கியமான தேர்தல் இது.
யாருக்கு வெற்றி வாய்பபு:
தனி பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் வெற்றி பெறாது என்ற சூழ்நிலையில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புக்கள் கூறுகின்றன. இந்தியாவின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க, 272 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற வேண்டும். இருப்பினும் மாநில கட்சிகளே பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்ற நிலை காணப்படுகிறது.
இந்தியாவில் இதற்கு முன் நடைபெற்ற தேர்தலில் நேரு குடும்பத்தின் ஆதிக்கமே இந்திய அரசியலில் ஓங்கி இருந்தது. இந்திய வரலாற்றில் கடந்த 67 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் நேரு குடும்பம், வரும் லோக்சபா தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்திக்கும் என சில கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. நேரு குடும்பத்தின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, அடுத்தடுத்த ஊழல் முறைகேடுகள் உள்ளிட்டவைகள் அக்குடும்பத்தின் மீதான மதிப்பை கீழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நேரு குடும்பத்தின் தற்போதைய தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா, தனது உடல்நிலை காரணமாக கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகன் ராகுலுக்கு இந்த ஆண்டு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொதுக் கூட்டங்களில் ராகுல் கூறி வரும் இரட்டை அர்த்த வாசகங்கள் மற்றும் சுவாரஸ்ரமில்லாத பிரசாரங்கள் ஆகியன உண்மையில் அவர் கட்சி தலைமை பொறுப்பை ஏற்க விரும்புகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அவர்கள் குடும்பத்தின் நடவடிக்கை இருக்கும் என்பதால் நேரு குடும்ப செயல்பாடுகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் மிக அதிகபட்சமாக 80 இடங்களைக் கொண்ட உத்திர பிரதேசம், வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அம்மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் பணியில்:
இந்திய
தேசிய தேர்தலுக்காக மிகப் பெரிய நிர்வாகம் செயல்பட உள்ளது. இந்த தேர்தல்
பணியில் 1.1 கோடி அரசு பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 9,30,000 ஓட்டுச்
சாவடிகளும், 1.7 மில்லியன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும்
தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தலுக்காக 645 மில்லியன் டாலர்
செலவிடப்பட உள்ளது. தேர்தல் பணிக்காக தேர்தல் பணியாளர்கள் கார்கள்,
ரயில்கள், விமானங்கள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் படகுகள்
மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இந்திய
தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் நேற்று தெரிவித்தார். மேலும்,
சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், ஜனநாயக நடைமுறைகளின்படி
தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில்
பிரச்னைகள் வருவது வழக்கமானது தான். வாக்காளர்களுக்கு பணம்
கொடுக்கப்படுவது, வேட்பாளர்கள் நிரணயிக்கப்பட்ட செலவு தொகையை மீறுவது
உள்ளிட்டவைகள் வழக்கமான ஒன்று. இருப்பினும் இம்முறை வேட்பாளர்களின் தேர்தல்
செலவுத் தொகை ரூ.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமான
பணப் புழக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய சமுதாயத்தில்
பரவலாக ஊழல் பரவி இருந்தாலும், தேர்தல் என்பது நியாயமான முறையில் நடத்தப்பட
வேண்டும் எனவும், தேர்தல் சக்தி வாய்ந்தது எனவும் நம்பப்படுகிறது.
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல் என லோக்சபா தேர்தல்
கருதப்படுவதால், இந்த தேர்தலில் அதிக அளவில் ஓட்டுக்கள் பதிவாகும் என்றே
கூறலாம். ஓட்டுப்பதிவை பொறுத்தவரையில் ஜாதி, மதம் மற்றும் வேட்பாளர் எந்த
பிரிவைச் சேர்ந்தவர் என்பதை பார்த்து ஓட்டளிப்பது இந்தியாவில் பல ஆண்டுகளாக
தொடர்ந்து வரும் வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு தேர்தல்களை விட
இந்த தேர்தலில் பா.ஜ., மற்றும் அரசியலில் புதிதாக களமிறங்கி உள்ள ஆம் ஆத்மி
கட்சியும் இந்த வழக்கமான அரசியல் பாரம்பரிய முறைகளை தகர்த்தெறிய வாய்ப்பு
உள்ளது. நல்லாட்சி மற்றும் உலக தரத்திலான வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்ற
வாக்குறுதியுடன் பா.ஜ.,வும், ஊழலுக்கு எதிரான சக்தியாக உருவெடுத்து ஊழலற்ற
இந்தியாவை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியுடன் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல்
களத்தில் நேரடி போட்டியில் இறங்கி உள்ளன. இவைகளில் எந்த வாக்குறுதி,
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை அதிகம் கவர்ந்துள்ளது என்பது தேர்தல்
முடிவுகளில் எதிரொலிக்கும்.
Comments