மிர்புர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை "டுவென்டி-20' தொடரின்
லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்தில் உலக கோப்பை "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன்
"சூப்பர்-10' போட்டிகள் இன்று துவங்கியது.
இதில் மிர்புரில் நடந்த முதல்
லீக் போட்டியில் இந்திய அணி , தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை
எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் "பீல்டிங்'
தேர்வு செய்தார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வங்கதேச ஆடுகளத்தில்
மிஸ்ரா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு
இந்திய அணி களமிறங்கியது.
மிஸ்ரா அபாரம்:
பாகிஸ்தான் அணிக்கு, கம்ரான் அக்மல் (8) சொதப்பல் துவக்கம் அளித்தார். தொடர்ந்து வந்த கேப்டன் முகமது ஹபீஸ் (15) ஏமாற்றினார். பின் சுழலில் அசத்திய மிஸ்ரா, முதலில் ஷேசாத்தை (22) அவுட்டாக்கினார். ஓரளவு தாக்குபிடித்த உமர் அக்மல் (33) ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அசத்திய மிஸ்ரா, இம்முறை சோயிப் மாலிக்கை (18) வெளியேற்றினார். புவனேஷ்வர் வேகத்தில் அப்ரிதி (8) நடையைகட்ட, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சாமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி, 103 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. கடைசி நேரத்தில் சோயிப் மக்சூத் (21) வேகமாக ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது.
கோஹ்லி அதிரடி:
சுலப
இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (24), தவான் (30) ஜோடி நல்ல
அடித்தளம் அமைத்தது. தொடர்ந்து வந்த யுவராஜ் சிங் (1) வந்த வேகத்தில் நடையை
கட்டினார். பின் கோஹ்லியுடன் ஜோடி சேர்த்த ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் பந்துவீச்சை, இந்த ஜோடி மிகச்சுலபமாக
எதிர்கொண்டது. ரெய்னா வந்த வேகத்தில் பிலாவல் பந்தில் 3 பவுண்டரி
விளாசினார். எதிர்முனையில் கோஹ்லி, தன்பங்கிற்கு அப்ரிதி "சுழலில்' 3
பவுண்டரிகள் அடித்தார். இதையடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை வேகமாக
நெருங்கியது. இதையடுத்து 2 ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்
உமர் குல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரெய்னா, வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி, 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி
பெற்றது. கோஹ்லி (36), ரெய்னா (31) அவுட்டாகாமல் இருந்தனர்.
பாகிஸ்தான் அணிக்கு அஜ்மல், குல், பிலால்வால் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை "டுவென்டி-20' அரங்கில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. வரும் 23ல் இதே மைதானத்தில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
Comments