தமிழகத்தில் மீண்டும் 10 மணி நேர மின் தடை அமலாக்கப்பட்டுள்ளது

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று, விருதுநகர், சிவகாசியில், லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, 'தற்போது, தமிழகத்தில், 2,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய, நடவடிக்கை எடுத்து, மின்பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 5,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, புதிய திட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டத்தில், 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கி, வேளாண்மை துறையில் ஏற்பட இருந்த பாதிப்பு சரி செய்யப்பட்டது' என்று பேசினார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக, தமிழகத்தில் மீண்டும், 10 மணி நேர மின் தடை அமலாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டை நெருங்குகிறது. ஆனால், மின் தடையை போக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், மின் பற்றாக்குறை அதிகரிப்பால், இரு நாட்களாக, நகர்ப்புறங்களில், ஆறு மணி நேரம், கிராமப் புறங்களில், 10 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய, மின் உற்பத்தி நிறுவு திறன், 10,364 மெகா வாட் ஆக உள்ளது. ஆனால், கடந்த, 2009ல், 9,500 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின், அதிகபட்ச மின் தேவை, படிப்படியாக அதிகரித்து, கடந்த ஜனவரி, 1ம் தேதி, 12,733 மெகா வாட் ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம், தலா, 600 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட, மேட்டூர் மற்றும் வடசென்னை புது அனல்மின் நிலையங்கள் உள்பட அனைத்து, அனல் மின் நிலையங்களிலும், முழு அளவில், மின் உற்பத்தி நடந்தது. அனல் மின் உற்பத்தி மூலம், 3,660 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், ஜனவரி மாதம், தமிழகத்தில், பெரும்பாலான நாட்கள், தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மின் தேவை, படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 12,050 மெகா வாட் ஆக இருந்த மின் தேவை, நேற்று, 12,260 மெகா வாட் ஆக அதிகரித்தது.

இந்நிலையில், கோளாறு காரணமாக, சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள, புது அனல் மின் நிலையத்தில், 600 மெகா வாட், தூத்துக்குடியில், 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதித்துள்ளது. இதனால், அதிகபட்சம், 3,660 மெகா வாட் மின் உற்பத்தி செய்த, அனல் மின் நிலையங்களில், நேற்று, 2,820 மெகா வாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது. காற்றின் வேகம் குறைந்ததால், நேற்று, காற்றாலைகளில், 180 மெகா வாட், மத்திய மின்தொகுப்பில் இருந்து, 2,700 மெகா வாட் என, மொத்தம், 10,970 மெகா வாட் மின்சாரமே வினியோகம் செய்யப்பட்டது. இரு நாட்களாக, 1,300 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டது. அதை சமாளிக்க, கடந்த, இரு நாட்களாக, தினமும், கிராமப்புறங்களில், 10 மணி நேரம், நகர்ப் புறங்களில், ஆறு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. வீடுகளுக்கு மட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்கும் மின் தடை செய்யப்படுகிறது.

இதனால், கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஆடை உற்பத்தி, பின்னலாடை, தோல் பொருட்கள், ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம், தென் மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கும். அப்போது தான் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிக்கும். அது வரை, தமிழகத்தில், மின்தடை, இதே நிலையில் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
பிரசார பகுதிகளில் மின்தடை இல்லை: கடந்த, இரு நாட்களாக மின்பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர், அமைச்சர்கள், அ.தி.மு.க., நட்சத்திர பேச்சாளர்கள், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அதை ஈடு செய்வதற்காக, பிற இடங்களில், மின்தடை நேரத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, மின் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments