பா.ஜ.,
பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, நாடு
முழுவதும், தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஒரே நாளில் மட்டும்,
அருணாச்சல பிரதேசம், அசாம், திரிபுரா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில்,
சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அருணாச்சல பிரதேசத்தில், பஷிகாட் நகரில்
நடந்த பிரசாரத்தில், அவர் பேசியதாவது:
தேசபக்தர்கள்:
வடகிழக்கு
மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இந்திய ராணுவத்தில்
பணியாற்றுகின்றனர். இதற்கு முன்னும், ஏராளமானோர், ராணுவத்தில்
பணியாற்றியுள்ளனர். 1962ல், சீன படையெடுப்பின்போதும், பிரிட்டிஷ் ஆட்சி
காலத்திலும், கார்கில் போரின்போதும், நாட்டுக்காக, வீரமாக போராடி, உயிர்
தியாகம் செய்தவர்களில், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கிய
பங்கு உண்டு. அண்டை நாடுகளிடமிருந்து, நம் நாட்டின் எல்லையை பாதுகாப்பதில்,
அருணாச்சல் உள்ளிட்ட, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களின் பணி,
மகத்தானது. நீங்கள் (வடகிழக்கு மாநில மக்கள்) உண்மையான தேச பக்தர்கள்.
அதற்காக, என் வீர வணக்கத்தை தெரிவிப்பதில், மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது,
உலகில் உள்ள நாடுகள் அனைத்தும், தங்கள் நாடுகளின் வளர்ச்சி திட்டங்களை
செயல்படுத்துவதில் தான், ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், நம் அண்டை நாடான சீனா
மட்டும், ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்படுகிறது. அந்த எண்ணத்தை சீனா,
கைவிட வேண்டும். இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில், கவனம் செலுத்த
வேண்டும்.
அபகரிக்க முடியாது:
அருணாச்சல
பிரதேசம், இந்தியாவின் ஒரு அங்கம். எதிர்காலத்திலும், இந்தியாவில்
அங்கமாகத் தான், அருணாச்சல் மாநிலம் இருக்கும். எந்த ஒரு சக்தியும்,
அருணாச்சல பிரதேசத்தை, இந்தியாவிடமிருந்து அபகரிக்க முடியாது. இந்த
மாநிலத்தை சேர்ந்த மக்கள், பயம் என்றால், என்ன என, தெரியாதவர்கள். இந்த
மண்ணின் மைந்தர்களின் சார்பில், ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன். எந்த
சூழ்நிலையிலும், அருணாச்சல பிரதேசம் உட்பட, இந்தியாவுக்கு சொந்தமான ஒரு
அங்குல நிலத்தை கூட, யாருக்கும் விட்டுத் தர மாட்டோம். இந்த விஷயத்தில்,
யாருக்கும் அடி பணிய மாட்டோம். அருணாச்சல பிரதேசத்தில், ஆயுர்வேதம்,
தோட்டக்கலை, கைத்தறித் தொழில் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பா.ஜ.,
ஆட்சிக்கு வந்தால், இந்த மூன்று துறைகளையும் மேம்படுத்துவோம். அருணாச்சல
பிரதேசம், உலக சுற்றுச் சூழல் துறையின் தலைநகரம். சுவிட்சர்லாந்துக்கு
குறையாத அனைத்து வளங்களும், இங்கும் உள்ளன. காங்., கட்சி, மத்தியிலும்,
மாநிலத்திலும், பல ஆண்டுகளாக ஆட்சி நடத்துகிறது. ஆனால், இந்த மாநில
மக்களின் வளர்ச்சிக்காக, ஒரு துரும்பை கூட, கிள்ளிப் போடவில்லை. வடகிழக்கு
மாநில மக்களின் வளர்ச்சிக்காக, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பல
திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மத்தியில், மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு
வந்தால், அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அருணாச்சல் பாசம்:
குஜராத்தில்
உள்ள துவாரகாவில் பிறந்த, கடவுள் கிருஷ்ணர், அருணாச்சல பிரதேசத்தை
சேர்ந்த, ருக்மினியை மணந்தார். எனவே, இரு மாநில மக்களுக்கும், 1,000
ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு உள்ளது. அருணாச்சலில் உள்ள, குறிப்பிட்ட
பழங்குடியின மக்களுக்கும், குஜராத்தில் உள்ள, என் மூதாதையர்களுக்கும்
நெருங்கிய தொடர்பு உள்ளது. எங்களைப் போலவே, இந்த பழங்குடியினத்தை
சேர்ந்தவர்களும், தங்கள் பெயர்களுக்கு பின், மோடி என்ற பெயரை இணைத்து
கொள்கின்றனர். இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.
'வங்கதேச இந்துக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்': அசாம்
மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: வங்கதேசத்தில்
இருந்து ஏராளமான இந்துக்கள், அசாமுக்கு அகதிளாக வருகின்றனர். அந்த நாட்டைச்
சேர்ந்தவர்களால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் அவர்கள், இந்தியாவுக்கு
வராமல், எங்கு போவர்? அவர்களுக்கு, நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும்.
அசாமில் உள்ள காங்., தலைமையிலான மாநில அரசு, வங்கதேசத்திலிருந்து வந்துள்ள
இந்துக்களை துன்புறுத்துகிறது; இது, மனித உரிமை மீறல். மத்தியில், பா.ஜ.,
ஆட்சிக்கு வந்தால், வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்கள் வசிப்பதற்கு,
முகாம்கள் அமைக்கப்படும். அதேநேரத்தில், ஓட்டு வங்கி அரசியலை உருவாக்கும்
நோக்கத்துடன், வங்கதேசத்திலிருந்து ஏராளமானோர், அசாமுக்குள்
ஊடுருவியுள்ளனர். அவர்களை, இங்கிருந்து திருப்பி அனுப்ப வேண்டும். இவ்வாறு,
அவர் பேசினார்.
Comments