லக்னோ: நரேந்திர மோடியின், டீ பிரசாரத்துக்கு போட்டியாக, உ.பி.,யில், 'ராகுல் பால் பூத்'களை, அம்மாநில காங்கிரசார் துவக்கியுள்ளனர்.
பா.ஜ.,
பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, இளமை
காலத்தில், டீ வியாபாரம் செய்ததால், காங்., கட்சியினர், அவரை
கிண்டலடிக்கும் விதமாக, 'டீ வியாபாரி' என, விமர்சித்தனர்.
இது, மோடிக்கு
சாதகமாக அமைந்து விட்டது. பா.ஜ.,வினர், நாடு முழுவதும், 'மோடி டீக்கடை'
என்ற பெயரில் கடைகளை அமைத்து, பொதுமக்களுக்கு, இலவசமாக டீ வழங்கி
வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள டீக்கடை வியாபாரிகளுடன், 'வீடியோ
கான்பரன்சிங்' மூலமாக, மோடி, கலந்துரையாடும் நிகழ்ச்சியும், சமீபத்தில்
நடத்தப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உ.பி.,
மாநிலம், கோரக்பூரில், முக்கியமான இடங்களில், 'ராகுல் பால்' என்ற பெயரில்,
'பூத்'களை அமைத்து, பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி வருகின்றனர்.
ராகுல் படம் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக் கிளாசில், இந்த பால்
வழங்கப்படுகிறது. 'டீ குடிப்பது உடலுக்கு தீமை பயக்கும். ஆனால், சுத்தமான
பால் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்' என்றும், பிரசாரம்
செய்கின்றனர். 'மோடியின் டீ பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,
இன்னும் சில மாதங்களில், நாடு முழுவதும், இந்த பால் திட்டத்தை செயல்படுத்த
போகிறோம்' என்றும், காங்., கட்சியினர் அறிவித்துள்ளனர். ஆனால்,
கோராக்பூரில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், 'இரண்டு நாட்கள் மட்டும் தான்,
இலவச பால் வழங்கினர். அதற்கு பின், பால் வழங்கப்படவில்லை; பால்
வழங்கியவர்களையும் காணவில்லை' என்கின்றனர்.
Comments