மிளகு பொடி ஸ்பிரே அடிப்பு : கத்தியுடன் வந்த எம்.பி.,க்கள் ;' வெட்கப்படுகிறோம் ': மீரா குமார்

புதுடில்லி: தெலுங்கானா தொடர்பான மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டதும் , இது வரை நடந்திராத வன் செயல்கள் பார்லி.,க்குள் நடந்தது. பார்லி., இரு அவைகளிலும் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. ஆந்திர பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி., ஒருவர் கையில் ரெடியாக வைத்திருந்த மிளகு ஸ்பிரேயை அடித்தார். 

கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்ததும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனது 23 ஆண்டு கால வரலாற்றில் நான் இது போன்ற ஒரு அவச்செயலை நான் பார்த்தது இல்லை என மத்திய பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளுடன் பேசி சபாநாயகரிடம் முறையிடுவோம் என்றும் கூறினார். அவையில் இருந்த எம்.பி.,க்கள் நிருபர்களிடம் கூறுகையில் ; இது போன்று வன்செயல் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இன்றைய மிளகு ஸ்பிரேக்கு உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கள் மீது கிரிமினில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள் துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

லோக்சபா சபாநாயகர் மீராகுமார் கூறுகையில் இந்த சம்பவத்தை கண்டு நாங்கள வெட்கி தலை குனிகிறோம். இது ஒரு கேவலமான செயல் என்றும் கண்டித்துள்ளார். நான் மிக கவலையுற்றுள்ளேன். இந்த உலக அளவில் பேரு பெற்ற இந்திய ஜனநாயக வரலாற்றில் இது பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளேன்.

பார்லி.,யில் மிளகு பொடி : பார்லி., அவைகள் துவங்கியதும் தெலுங்கானா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஆந்திர பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கானா, சீமந்திரா எம்.பி.,க்கள் ஆளுக்கொரு பக்கம் எதிர் கோஷங்கள் எழுப்பினர். துணை தலைவர் மைக் பிடுங்கி எறியப்பட்டது. தெலுங்கு தேச எம்.பி., ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டார்.

லோக்சபாவில் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். இந்நேரத்தில் ஆந்திர எம்.பி.,க்கள் கையில் வைத்திருந்த மிளகு மற்றும் மிளகாய் பொடியை ஸ்பிரே மூலம் அருகில் இருந்த எம்.பி.,க்கள் மீது அடித்தனர். இதில் ராஜகோபால் என்ற காங்கிரஸ் எம்.பி., ஈடுபட்டது உடனடியாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து இவரை சிலர் மடக்கி பிடித்தனர். இந்த எம்.பி தெலுங்கானா விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.

ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை: இதில் பலரது கண்களும் எரிந்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. காயமுற்ற எம்.பி.,க்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நான் மிக கவலைப்படுகிறேன்: அத்வானி: இன்று நடந்த சம்பவம் குறித்து நான் மிக கவலைப்படுகிறேன். சம்பந்தப்பட்டவர்களை சஸ்பெண்ட் செய்வது என்பதை விட முழுமையாக எம்.பி,. பொறுப்பில் இருந்து நீக்கிட வேண்டும். இது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். என்றார் அத்வானி.

Comments