மும்பையில் ராஜ் தாக்கரே முற்றுகை நாடகம் : கைதான சில நிமிடங்களில் விடுதலை

மும்பை: மகாராஷ்டிராவில், "டோல்கேட்'களை முற்றுகையிட முயன்ற, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.,) தலைவர், ராஜ் தாக்கரே, போலீசாரால் கைது செய்யப்பட்ட, சிறிது நேரத்தில் விடுதலையானார். மகாராஷ்டிராவில், முதல்வர் பிருத்விராஜ் சவான் தலைமையிலான காங்கிரஸ் - தேசியவாத காங்., ஆட்சியில் உள்ளது.
மாநிலத்தில் உள்ள, 100க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில், வாகன ஓட்டிகளிடம் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கட்டணம் வசூலிக்கப்படும் அளவிற்கு சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை எனவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரே குற்றம் சாட்டினார்.இதை கண்டித்து, மாநிலம் முழுவதும் நேற்று, டோல்கேட்டுகளை முற்றுகையிடப் போவதாக, ராஜ் தாக்கரே, அறிவித்தார். இதையடுத்து, அவரது கட்சித் தொண்டர்கள் பலரும், மாநிலத்தின் பெரும்பாலான டோல்கேட்டுகளை முற்றுகையிட முயன்றனர். அனைத்து டோல்கேட்டுகளிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை.
மும்பையில், டோல்கேட் ஒன்றை முற்றுகையிடச் சென்ற, ராஜ் தாக்கரேவை, போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றினர். பின், சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

Comments