பாலுமகேந்திராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து அவரிடம் உதவியாளர்களாக பயின்ற இயக்குநர்கள் பாலா, ராம், பாலாவின் உதவியாளர் சீனு ராமசாமி, நடிகர் கருணாஸ் மற்றும் ஏராளமான உதவி இயக்குனர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்.
இலங்கையின் பட்டிகலோயா பகுதியில் 1939ம் ஆண்டு பிறந்த இவர் 1971ம் ஆண்டு நெல்லு என்ற மலையாள படத்தில் கேமிராமேனாக திரைஉலகிற்கு அறிமுகமானார். தனது தந்தையால் கேமிரா மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய சினிமாவில் டைரக்டர், வசனகர்த்தா, எடிட்டர், ஒளிப்பதிவாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர். இலங்கையில் பள்ளி படிப்பை முடித்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்ற இவர், அதற்காக தங்க பதக்கமும் பெற்றுள்ளார்.
இயற்கை வெளிச்சத்தில் எளிமையான, அதே சமயம் பிரமிக்க வைக்கும் அழகை காட்டி படம் எடுப்பதில் பாலு மகேந்திரா கைதேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார். தென்னிந்திய சினிமாவை குறிப்பாக தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்றவர்களில் பாலுமந்திரா குறிப்பிடத்தக்கவர்
சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இவர், 1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடிஎடுத்து வைத்தார். மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக அவர் இயக்கிய தலைமுறைகள் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைவரின் பாராட்டை பெற்றது. மேலும் இதுநாள் வரை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்த வந்த அவர் முதன்முறையாக இப்படத்தில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகனாகவும் நிரூபித்தார்.
டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைஉலகில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. 74 வயதாகும் பாலுமகேந்திராவுக்கு அகிலேஷ்வரி என்ற மனைவியும் கெளரி சங்கர் என்ற மகனும் உள்ளனர். இவரும் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். ஸ்ரேயாஸ் என்ற பேரன் ஒருவரும் உள்ளார். பாலு மகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகளையும், 2 நந்தி உள்ளிட்ட பிற மாநில விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.
பாலுமகேந்திராவின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது உடல் வடபழனியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(பிப்ரவரி 14ம் தேதி) போரூர் மின் மயானத்தில் காலை 11.00 மணிக்கு உடல் தகனம் செய்யப்படுகிறது.
கண்ணீர் விட்டு அழுத பாரதிராஜா
பாலுமகேந்திராவின் மறைவை கேட்டு ஏராளமான திரையுலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா, கண்ணீர் விட்டு கதறி அழுது தன் அஞ்சலியை செலுத்தினார். அவருடன் இயக்குநர்கள் விக்ரமன், ராம், பாலா, நடிகர்கள் சந்திரசேகர், மனோஜ், நடிகை ''வீடு'' அர்ச்சனா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
பாலுமகேந்திரா இன்று நம்மை விட்டு மறைந்தாலும் அவர் கட்டிய வீடு, அழியாத கோலங்கள், சந்தியா ராகம் போன்றவை என்றும் நீங்காமல், நீங்கள் கேட்டவையாக இருக்கும்.
Comments