இந்தக் கொலை குறித்த வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை
செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டது. தடா நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து குற்றம்
சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன்,
சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு ஆகிய நான்கு
பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும்; 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாகக் குறைத்தும், மீதமுள்ள 19 பேரை விடுதலை செய்தும்
தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் உச்ச
நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனுவினை
விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து 8.10.1999 அன்று
தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் மேதகு தமிழக ஆளுநர்
அவர்களுக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். இந்த
கருணை மனுக்கள் 27.10.1999 அன்று மேதகு தமிழக ஆளுநர் அவர்களால்
நிராகரிக்கப்பட்டன.
மேதகு தமிழக ஆளுநர் அவர்களின் ஆணையினை எதிர்த்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை கைதிகளால் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை
ஏற்று, கருணை மனுக்களை நிராகரித்த மேதகு ஆளுநரின் ஆணையை தள்ளுபடி
செய்ததோடு, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு
மேதகு ஆளுநருக்கு 25.11.1999 அன்று உத்தரவு பிறப்பித்தது.
Comments