புதுடில்லி : டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவிக்கு நெருக்கடி
உருவாகியுள்ளது. மந்திரி பதவி கிடைக்காத, எம்.எல்.ஏ., ஒருவர், அவருக்கு
எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ''தேர்தலுக்கு முன், மக்களுக்கு
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிலிருந்து, 'ஆம் ஆத்மி' கட்சி
விலகிச் செல்கிறது,'' என, அந்த எம்.எல்.ஏ., குற்றம் சாட்டிஉள்ளார்.
டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்தபோது, அந்த அரசில், அமைச்சர் பதவி கிடைக்காமல், அதிருப்தி அடைந்தவர், எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி. அப்போதே தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்தபோது, அந்த அரசில், அமைச்சர் பதவி கிடைக்காமல், அதிருப்தி அடைந்தவர், எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி. அப்போதே தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மீண்டும் குற்றச்சாட்டு :இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது, மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
டில்லியில், நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன், ஆம் ஆத்மி கட்சி, மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளுக்கு முரணாக, தற்போது, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு செயல்படுகிறது. அமைச்சர் பதவி கிடைக்காததால்,நான் அதிருப்தி அடைந்து, இதைச் சொல்லவில்லை.பொதுநலன் கருதியே, இந்தப் பிரச்னையை எழுப்புகிறேன். முக்கியமான பிரச்னைகளில் இருந்து, கட்சி விலகிச் செல்வதால், இதைச் சொல்கிறேன்.என்ன காரணத்திற்காக, ஆம் ஆத்மி துவக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை.இவ்வாறு, வினோத்குமார் பின்னி கூறினார்.
பின்னியின் குற்றச்சாட்டு குறித்து, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: பின்னி, தன்னை முதலில் அமைச்சராக்க வேண்டும் என, கோரினார். அதன்பின், லோக்சபா தேர்தலில் போட்டியிடவாய்ப்பு அளிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். இதற்காக, 'சீட்' கேட்டும், என் வீட்டிற்கு வந்தார்.
சீட் வழங்கக் கூடாது:ஆனால், 'தற்போதைய, எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கும், தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக் கூடாது' என, கட்சி மேலிடம் முடிவெடுத்ததால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.டில்லியில், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, 70 வேட்பாளர்களின் கூட்டத்தையும்,சமீபத்தில் நடத்தினோம். அப்போது, எந்தப் பிரச்னையையும் எழுப்பாத பின்னி, தற்போது, விமர்சனம் செய்வது புதிராக உள்ளது. பிரச்னைகளை தீர்ப்பதில், எங்கள் அரசு, அக்கறையோடு செயல்படுகிறது. எங்கள் அரசின் நிர்வாகத்தில் குறை இருந்தால், அதுபற்றி, பா.ஜ.,வோ, பொதுமக்களோ அல்லது மீடியாக்களோ விமர்சனம் செய்தால், அதை வரவேற்கத் தயாராக உள்ளோம்.இவ்வாறு, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால், நிர்வாக திறமையின்றி செயல்படுவதாக, கடந்த சில நாட்களாக, அவர் மீது, பல தரப்பிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,அவரது கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,வே, வாக்குறுதிகளுக்கு முரணாக, டில்லி அரசு செயல்படுகிறது என, புகார் தெரிவித்துள்ளது, டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொந்தளித்த கெஜ்ரிவால் : டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான, கெஜ்ரிவால் வீடு முன், விவசாயி மற்றும் ஆசிரியர் ஆகிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், நேற்று, பெருமளவில் திரண்டனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, கெஜ்ரிவாலை, அவர்கள் முற்றுகையிட்டனர். இதனால், கோபமடைந்த கெஜ்ரிவால், ''உங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதற்கு, இது சரியான வழி அல்ல,'' என, கூறியபடியே, அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
Comments