லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதி களில்,
தே.மு.தி.க., சார்பில், போட்டியிட விரும்புவோருக்காக, சென்னை
கோயம்பேட்டில் உள்ள, அந்தக் கட்சி யின் தலைமையகத்தில், நேற்று விருப்ப
மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. தே.மு.தி.க., தலைமை, நேற்று வழங்கிய
விருப்ப மனுவில், மனுதாரரின் பெயர், வயது, முகவரி, தொழில், தொலைபேசி எண்,
தமிழ் தவிர அறிந்துள்ள மொழிகள், போட்டியிட விரும்பும் தொகுதியில்
வசிப்பவரா, வசித்தால் வாக்காளர் அடையாள அட்டை எண், மனுதாரரின் குடும்ப
பின்னணி மற்றும் இ-மெயில் முகவரி போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.பொது தொகுதிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாயும், தனி தொகுதிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், கட்டணம் செலுத்திய பிறகே, விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. பேண்டு வாத்தியங்கள் முழங்க வந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்ட நிர்வாகிகள் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
கன்னியாகுமரியில் விஜயகாந்தும், கோவையில் பிரேமலதாவும் போட்டியிட வேண்டும்' எனக்கூறி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., செயலர் சேகர், விருப்ப மனுக்களை பெற்றார். அவரைத் தொடர்ந்து, மேலும் சிலரும், கன்னியாகுமரியில் விஜயகாந்த் போட்டியிட மனு பெற்றனர். திருச்சி மற்றும் அரியலூரில், விஜய காந்த் போட்டியிட வேண்டும் என, திருச்சி வடக்கு மாவட்ட செயலர், நடராஜனும், கரூரில் போட்டியிட வேண்டும் என, அந்த மாவட்ட செயலர், கிருஷ்ணனும், விருப்ப மனு பெற்றனர்.
இவர்களை தொடர்ந்து, மற்ற மாவட்ட நிர்வாகிகள், தங்கள் பெயர்களில் விருப்ப மனுக்களை பெற்று, உடனடியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்க, முதல் நாளான நேற்று, 100க்கும் மேற்பட்டோர், மனுக்களை அளித்தனர். மனுக்கள் தாக்கல் செய்ய, கடைசி நாள், பிப்ரவரி முதல் தேதி.
அத்துடன், மனுதாரர் ஏற்கனவே உள்ளாட்சி அல்லது சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தால், அதன் விவரங்கள், அதற்கான தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விவரங்கள் போன்றவையும் கோரப்பட்டிருந்தன. பிப்., 2ம் தேதி, உளுந்தூர்பேட்டை யில், கட்சி மாநாடு முடிந்ததும், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களை, தே.மு.தி.க., தேர்தல் பணிக்குழுவினர் அழைத்து, நேர்காணல் நடத்தவுள்ளனர். அப்போது, பணிக்குழுவினர் தங்களின் கருத்துக்களை குறிப்பிட்டு, மனுக்களை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பரிசீலனைக்கு அனுப்புவர். அவர் இறுதி முடிவெடுப்பார்.
Comments