' ஸ்பெக்ட்ரம் ஏலம் - சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடக்கவில்லை '- மன்மோகன்சிங்

புதுடில்லி: நமது ஆட்சி காலத்தில் நாம் இந்த நாட்டிற்கு செய்த சாதனகளை எடுத்து சொல்லி ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற முடியும் என்றும், வரவிருக்கும் தேர்தலில் ராகுல் தலைமையில் காங்., வெற்றி பெறும் என்றும், இதில் சந்தேகம் இல்லை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் ஏலம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார்.


வாக்காளர்களிடம் சொல்ல வேண்டும் : இன்றைய காங்., கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்; சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தன்னை ஆய்வு செய்ய வேண்டும். இருப்பினும் காங்கிரஸ் தனது நம்பிக்கை இழக்காமல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நாம் நமது சாதனைகளை வாக்களார்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். நமது சாதனைகளை சொல்லி ராகுல் தலைமையில் நாம் வெற்றி பெற முடியும். இது ராகுலின் வெற்றியாக இருக்கும், எதிர்கட்சியினர் கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் நம்மை பற்றி இவர்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். ஐ.மு., கூட்டணி ஆட்சி மற்றும் தே.ஜ., கூட்டணி ஆட்சியை ஒப்பிட்டு பார்க்க வாக்காளர்களிடம் சொல்ல வேண்டும். இதில் நாமே சிறந்து விளங்குகிறோம். நாட்டில் உள்ள முக்கிய எதிர்கட்சி நாட்டை துண்டாட நினைக்கிறது. உலக அளவில் நாம் பொருளாதார வளர்ச்சியை கண்டிருக்கிறோம்.

தலைமை கணக்காயம் கேள்வி : நாட்டின் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்கள் எண்ணிக்கையை 3 மடங்கு குறைத்துள்ளோம். தலைமை கணக்காயம் கேள்வி கேட்டு கொண்டிருப்பதால் நாட்டில் அதிகாரிகள் எந்தவொரு முடிவையும் எடுக்க அஞ்சுகின்றனர். பின்தங்கிய மாநிலங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. விலைவாசி உயர்ந்ததால் விவசாயிகள் பயன் பெற்றனர்.

ஊழலை ஒழிக்க பேரூதவி : பெண்கள் பாதுகாப்பு நமது முக்கிய அம்சமாக இருக்கும். இதற்கென நாம் கடும் சட்ட திட்டங்களை வகுத்துள்ளோம். ராகுல் ஒரு நம்பிக்கைக்குரியவர். இவர் பல்வேறு முன்னோக்கு எண்ணம் கொண்டவர். இவரது தலைமையில் காங்., வெற்றி பெறும். இது மிக உயர்ந்த அளவில் இருக்கும். ஊழலுக்கு எதிராக நாம் போராடவில்லை என்றும் நம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. லோக்பால் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாம் கொடுத்தோம், இது ஊழலை ஒழிக்க பேருதவி செய்து வருகிறது. நிலக்கரி சுரங்கம் மற்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த வொரு தவறும் நடக்கவில்லை. நிலக்கரி ஒதுக்கீடு முறையை மாற்றி அமைத்துள்ளோம். சட்டத்தின் வரைமுறைகளையே பின்பற்றினோம்.

சில நேரங்களில் நாம் தவறுகள் செய்திருக்கலாம், இதனை திருத்திக்கொண்டுள்ளோம். ஆனால் நாம் அதில் இருந்து பாடம் கற்றுள்ளோம். நமது மனசாட்சி தூய்மையாக உள்ளது. சமூக நீதி மற்றும், மதச்சார்பின்மையை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். ஊழலை ஒழிப்பதில் நம்மை போல யாரும் செயல்படவில்லை.

நம்முடைய பல்வேறு சாதனைகளுக்கு நமக்கு பலன் கிடைக்கவில்லை. காரணம் மக்கள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். காங்., தலைவர் சோனியா தலைமையில் ஐ.மு., கூட்டணி ஆட்சி சிறந்து விளங்கியது. இதற்கு துணையாக இருந்த அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது ஆட்சியில் சாதனை புரியும் அளவிற்கு கிராமப்புற சாலைகளை அமைத்துள்ளோம். எண்ணற்ற நகரங்கள் ரயில் போக்குவரத்தை பெற்றது. கல்விச்சாலைகள் பல தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

Comments