இலங்கை மன்னரின் கடைசி வாரிசு வறுமையில் மரணம்

வேலூர்: இலங்கையில் ஆட்சி செய்த, கடைசி தமிழ் மன்னரின் வாரிசான, பிருதிவிராஜ், வறுமையில் வாடி, வேலூரில், நேற்று, மாரடைப்பால் இறந்தார்.
இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி.,1739 1815 வரை, ஆட்சி செய்தனர். இலங்கையில் ஆட்சி செய்த, கடைசி தமிழ் மன்னர் விக்ரமராஜசிங்கன். இவர் மீது, நான்கு முறை, போர் தொடுத்த, ஆங்கில அரசு, இறுதியில், கண்டியை கைப்பற்றி, மன்னனையும்,
ஏழு பட்டத்தரசிகளையும் கைது செய்து, கப்பல் மூலம், தமிழகம் கொண்டு வந்து, 1816ல், வேலூர் கோட்டையில், கண்டி மகாலில், சிறை வைத்தனர். கடந்த, 1832, ஜன., 30ம் தேதி, விக்ரமராஜசிங்கன் இறந்தார். அவரது உடல், வேலூர், காட்பாடி ரோடு, பாலாற்றங்கரையில் புதைக்கப்பட்டு, கல்லறை கட்டப்பட்டது; அதன் அருகில், 1843ல் இறந்த, அவரது மகன் ரங்கராஜா கல்லறையும் அமைக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த, விக்ரமராஜ சிங்கரின் மகன் ரங்க ராஜாவுக்கு, கண்டி மகாலில், பிறந்தவர் தான், பிருதிவிராஜ். வாரிசுகள், ஒவ்வொருவராக இறந்த பின், பிருதிவிராஜை, யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், கண்டி மகாலை விட்டு, வெளியேறிய பிரதிவிராஜ், வேலூர், சாயிநாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்தார். கூலி வேலைக்கு சென்று, பி.ஏ., படித்துள்ளார். தியேட்டர்களில், மேலாளராக பணியாற்றிய, பிருதிவிராஜுக்கு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. அப்போது, ஆட்சியில் இருந்த, தி.மு.க., அரசிடம், 'தான், இலங்கையை ஆண்ட, கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கன் வாரிசு' என்றும், ஏதாவது, உதவி செய்யும்படி கேட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை, பிருதிவிராஜ் அனுப்பியுள்ளார்.

எந்த நடவடிக்கையும் இல்லாததால், சத்துவாச்சாரியில், தியேட்டர் ஒன்றில், டிக்கெட் கிழிக்கும் வேலை செய்த போது, விபத்தில் காலில் அடிபட்டதால், வீட்டுக்குள்ளேயே, பிருதிவிராஜ் முடங்கினார். 74 வயதான பிருதிவிராஜ், நேற்று காலை, 7:40 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார். தியேட்டரில் மேலாளராக பணியாற்றிய போது, புஷ்பா என்ற பெண்ணை மணந்த, பிருதிவிராஜுக்கு, 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன், எலக்ட்ரிஷியனாகவும், இன்னொருவர், சி.எம்.சி., மருத்துவமனையில், 'அட்டெண்டர்' ஆகவும் பணியாற்றி வருகின்றனர்.

Comments