புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக தர்ணா போராட்டத்தில்
இறங்கியுள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இவர் போராட்டம நடத்தும் ரயில்வே பவன் அருகே பா.ஜ., மற்றும் இந்து
அமைப்பினர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். எதிர்ப்பாளர்கள்
கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில தடுப்பு வேலிகள் தொண்டர்களால் தள்ளி விடப்பட்டது. லேசான தடியடி நடத்தப்பட்டது. கல்வீச்சில் போலீசார் ஒருவர் காயமுற்றார். இதனை தொடர்ந்து பெரும் அளவில் வன்முறை வெடிக்கும் சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவ படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கலவரம் வெடிக்கும் அபாய சூழல் : காலை
முதல் இன்றைய போராட்டக்களத்தில் பல இடங்களில் தொண்டர்கள் தடுப்பு வேலிகளை
அகற்றினர். இந்த நேரத்தில் போலீசார், தொண்டர்கள் இடையே அவ்வப்போது சிறு,
சிறு மோதல் ஏற்பட்டு வருந்தது. மாலை தடுப்புவேலிகள் அகற்றப்படும்போது
போலீசார் பல இடங்களில் தடியடி நடத்த வேண்டியதாயிற்று. இதில்
பத்திரிகையாளர்கள், தொண்டர்கள் 10 பேர் காயமுற்றனர். மோதல் மூளுவதும்,
பின்னர் குறைவதுமாக மாறி, மாறி டென்ஷன் தொற்றிக்கொண்டேயிருக்கிறது. பெரும்
மோதலாக மாறி கலவரம் வெடிக்கும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
டில்லியில் ஆளும் அரசுக்கு கீழ்படியாத போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றால் போலீஸ் துறை மாநில அரசின் கீழ் வரவேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் கெஜ்ரிவால் அவரது அமைச்சர்கள் துவக்கியுள்ள தர்ணா போராட்டம் இன்று 2 வது நாளாக தொடர்கிறது. நேற்று இரவு முழுவதும் முதல்வர் போராட்டக்களமான ரயில்வே பவன் ரோட்டிலேயே போர்வையை போர்த்தியபடி தூங்கினார்.
மக்களுக்கு எதிரானதா ? இவரது
போராட்டம் நியாமானதா , மக்களுக்கு எதிரானதா , மத்திய அரசுடன் மோதும்
போக்கு ஏற்புடையதா என பல தரப்பினரும் விமர்சனம் செய்து கொண்டிருந்தாலும்,
பெண்கள் கற்பழிக்கப்பட்டால் பொறுப்பேற்பது யார் ? டில்லி மக்களின்
குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டிய
பொறுப்பு முதல்வர் முறையில் எனக்கு உண்டு என்று தனது பக்க நியாயத்தை
கெஜ்ரிவால் எடுத்து கூறி வருகிறார். மத்திய அரசின் போலீஸ் பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்படும் வரை தனது போராட்டம் தொடரும் என்றும்,
போராட்டக்களத்தில் இருந்தே நான் அரசின் செயல்பாட்டை கவனிப்பேன். குடியரசு
தின அணி வகுப்பு என்பது பயனற்றது. இது முழுக்க, முழுக்க
வி.வி.ஐ,பி.,க்களுக்காக நடத்தப்படுவையே. பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல்
குடியரசு தினம் கொண்டாடி பயனில்லை. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் குடியரசு
தின கொண்டாட்டம் நடக்கும் பாதையை மக்களை கொண்டு முடக்குவேன். நான் டில்லி
முதல்வர் , எனக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு. இடத்தை மாற்று என்று
சொல்வதற்கு உள்துறை அமைச்சர் ஷிண்டே யார் ? இவ்வாறு கொதித்து வருகிறார்
கெஜ்ரிவால்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிர்வாகத்தை மாநில அரசின்
கையில் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. டில்லி தலை நகர் என்பதால் இந்த
போலீஸ் கட்டுப்பாடு மத்திய அரசின் கையில் தான் இருக்க வேண்டும். இதனா ல்
பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை
நியாயமற்றது என உள் துறை அமைச்சர் ஷிண்டே கூறியுள்ளார்.
2 வது நாளாக மெட்ரோ ரயில் ஸ்டேஷன்கள் மூடப்பட்டிருக்கிறது. டில்லி நகரி ன்
முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ., குறை கூறியிருக்கிறது.
குடியரசு தின சென்டிமென்டை கெஜ்ரிவால் கேலி செய்வது ஒரு முதல்வருக்கு
அழகல்ல. இது தேசப்பற்று தொடர்பான விஷயம் என்றும் பா.ஜ., கூறியுள்ளது.
தடுப்புகளை அகற்றிய முதல்வர்: கெஜ்ரிவால் போராட்டம் நடத்தும் பகுதியில்
பாதுகாப்பு காரணமாக பல இடங்களில் தடுப்பு வேலிகள் வைத்திருந்தனர். இதனால்
ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டக்களத்திற்கு வருவது கட்டுப்படுத்தப்பட்டது.
இதனை அறிந்த முதல்வர் கெஜ்ரிவால் எழுந்து சென்று தடுப்புக்களை அகற்றி
அனைவரும் போராட்டத்தில் இணையுமாறு கேட்டு கொண்டார், முதல்வர் என்பதால்
போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.
உரிய நடவடிக்கை எடுப்போம்: நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட முறைப்படி தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்
என்று டில்லி போலீஸ் அதிகாரி தியாகி கூறினார்.
போலீசுக்கு தொந்தரவு கூடாது: டென்சன் பற்றிக்கொண்டிருந்த நேரத்தில்
தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் மணீஷ் சிசோடியா பேசுகையில், யாரும்
வன்முறையில் ஈடுபடக்கூடாது. போலீசாருடன் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்.
தடுப்பு வேலிகளை அகற்ற கூடாது. வன்முறை நடக்க கூடாது. சில விஷமிகள்
கலவரத்தை ஏற்படுத்த நினைக்கலாம். நாம் ஜனநாயக ரீதியாக போராட்டம்
நடத்துகிறோம். இவ்வாறு பேசினார்.
Comments