சென்னை: கட்சி தலைமையுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த
கருணாநிதியின் மகனும், தென்மண்டல செயலருமான மு.க., அழகிரி இன்று
கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக
நீக்கப்படுவதாக கட்சியின் பொதுசெயலர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதால் தலைமைக்கழகம் இந்த ஒழுங்கு நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும், கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு
அனைவரும் ஒற்றுமையுடன் , ஏற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
அன்பழகன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி சமீபத்தில்
கட்சியின் தே.மு.தி.க.,வுடனான கூட்டணி தொடர்பாக கட்சியின் தலைமைக்கு
வேறுபட்ட கருத்தை வெளியிட்டார். இது கட்சி தலைவர் கருணாநிதிக்கு கடும்
கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அழகிரி ஆதரவாளர்கள் பொதுக்குழு கூடுவதாக
ஒட்டிய ஒரு போஸ்டர் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த சில
நாட்களுக்கு முன்னர் அழகிரி ஆதரவாளர்கள் மன்னன், முபாரக், உள்ளிட்டவர்கள்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
வரும் 30ம் தேதி அழகிரி பிறந்த நாள் மதுரையில் கோலாகலமாக கொண்டாட முடிவு
செய்யப்பட்டிருந்த நேரத்தில் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பது
அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Comments