புதுடில்லி: கடந்த 2008ம் ஆண்டு தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்த
ராகுல் தங்கிய வீட்டின் தற்போதைய நிலை குறித்து ஆம் ஆத்மி கட்சியைச்
சேர்ந்த குமார் விஸ்வாஸ் நிருபர்களிடம் பேசினார்.
கடந்த 2008ம் ஆண்டு
இப்போதைய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தனது சொந்த தொகுதியான அமேதியில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தலித் ஒருவரின் வீட்டில் தங்கிய அவர்,
அங்கு உணவருந்தினார். ராகுலின் இந்த செயல் காங்கிரஸ் கட்சியால் பெரிதும்
பேசப்பட்டது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் இதை ஒரு அரசியல் ஸ்டன்ட் என
விமர்சித்தன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி கடும் சவாலாக
உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சார்பில், எதிர்வரும் லோக்சபா தேர்தலில்
அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் என்பவர் போட்டியிடவுள்ளார். அதற்கான
முன்னேற்பாடுகளை இப்போதே துவங்கியுள்ள விஸ்வாஸ், தொகுதி முழுவதும்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குமார் விஸ்வாசுக்கு எதிர்ப்பு
தெரிவித்து தொகுதியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது.
இதனிடையே
குமார் விஸ்வாஸ் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த
2008ம் ஆண்டு ராகுல் தலித் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, தங்கி
உணவருந்திய கதைகளை கேட்டேன். அந்த வீடு தற்போது எப்படி இருக்கிறது என அறிய
எனக்கு ஆவல் ஏற்பட்டது. ஆனால் அங்கு சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி
காத்திருந்தது. அந்த வீடு எவ்வித மாற்றமும் இன்றி முன்பு போலவே
காணப்பட்டது. அந்த வீட்டில் வசித்து வரும் சுனிதா என்ற பெண் என்னிடம்
கூறுகையில், உ.பி.,யில் ஆளும் சமாஜ்வாடி கட்சியினர் தனது வீட்டை தீவைத்து
கொளுத்தி விட்டதாகவும், தனக்கு உதவும்படி ராகுலிடம் பலமுறை
கேட்டுக்கொண்டும் அவர் தனக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்றும்
கூறினார். மக்களுக்கு உதவி செய்ய ராகுல் விரும்பவில்லை என்பதையே,
சுனிதாவின் இந்த குமுறல் தெரிவிக்கிறது. அவர் அரசியல் ஸ்டன்டுக்காக மட்டுமே
இங்கு தங்கியிருக்கிறார். இது மிகவும் வெட்ககரமானது". இவ்வாறு விஸ்வாஸ்
தெரிவித்தார்.
Comments