'தி.மு.க., தானாக தோல்வியுறும்'- அழகிரி; மதுரையில் என்ன சொல்லப்போகிறார் ?

சென்னை: நாங்கள் போட்டி வேட்பாளரையெல்லாம் நிறுத்த வேண்டியதில்லை. தி.மு.க., தானாக தோல்வியுறும் என தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மாஜி தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலர் மு.க.அழகிரி இன்று நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் மதுரையில் நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் பல புதிய தகவல்களை தெரிவிப்பதாக ஒரு சூட்சுமத்தை வைத்து பதில் அளித்தார்.

கட்சி கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் , செயல்பட்டதாக கருணாநிதியின் மகன் அழகிரி நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பொதுசெயலர் அன்பழகன் அறிவித்தார்.

நேற்று இரவுக்கு பின்னர் இன்று காலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அழகிரி தனது வீட்டில் நிருபர்கள் சந்தித்து கேள்விகளை கேட்டனர். அப்போது அழகிரி கூறியதாவது: எனது ஆதரவாளர்களை நீக்கியது ஏன் என்று கேள்வி கேட்டேன். கொட்டாம்பட்டி ராஜேந்திரன் கட்சி தேர்தல் குறித்து பல ஆதாரங்களை எனக்கு கொடுத்தார். இதனை நான் கட்சி தலைமைக்கு கொடுத்தேன்.

கட்சிக்கு சிலர் கெடுதல் செய்ததை ஆதாரங்களுடன் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பது போல் பாசாங்கு செய்தனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டது நியாயத்திற்கு கிடைத்த பரிசு. எனக்கு ஆதரவாக யாரும் போஸ்டர் ஒட்டக்கூடாதா ? போஸ்டர் ஒட்டக்கூடாது என தி.மு.க.,வில் சட்டம் ஏதும் இருக்கிறதா ? தி.மு.க.,வில் ஜனநாயகம் செத்து விட்டது.

சுய மரியாதை உணர்வு : அவர்கள் தரப்பில் மட்டும் வருங்காலமே, என்றும் வருங்கால தலைமையே என்றும் சி.எம்மே., என்றும் போஸ்டர் ஒட்டப்பட்டது அப்போதெல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சுய மரியாதை உணர்வு கொண்ட பொதுசெயலர் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் ? வரும் தேர்தலில தி.மு.க.,வை எதிர்த்து போட்டி வேட்பாளர் யாரையும் நிறுத்த போவதில்லை. தி.மு.க,. தானாக தோல்வி அடையும். வரும் 31ம் தேதி மதுரையில் பிரஸ் மீட் வைத்துள்ளேன். இன்று அனைத்தையும் வெளியிடுவேன். நிறைய விஷயங்கள் என்னிடம் உள்ளது இவ்வாறு அழகிரி கூறினார்.

Comments