சமூக ஜனநாயக கூட்டணி சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள,
பா.ம.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், நேற்று முன் தினம் சிதம்பரத்தில்
நடந்தது.
இந்தக் கூட்டத்தில், ராமதாஸ் பேசியதாவது:
பா.ம.க.,வும், வன்னியர் சங்கமும் எந்த ஜாதியினருக்கும் எதிரிகள் அல்ல.
தர்மபுரி மற்றும் மரக்காணம் கலவரம், பா.ம.க.,வுக்கு எதிராக திட்டமிட்டு
நடத்தப்பட்டவை.
இந்தக் கலவரத்தில் வன்னியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால்,
இளைஞர்களுக்கு வெறித்தனம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் கலவரங்களில்,
தமிழகம், 10வது இடத்தில் உள்ளது. கடன் சுமையில், இரண்டாவது இடத்தில்
உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில், 13 லட்சமாக இருந்த, பணியாளர்கள்
எண்ணிக்கை, 10 ஆண்டுகளில், 10 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 'விபத்தில்
வன்னியர்கள் இறந்தால், நிவாரணம் வழங்கக்கூடாது' என, முதல்வர் ஜெ.,
அதிகாரிகளிடம் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப்
பார்த்த பிறகும், அந்த ஜாதியினர் அ.தி.மு.க.,விலும், தி.மு,க.,விலும்
இருக்கலாமா? தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்,
வன்னியர்கள் என்றால் கசக்கிறது. ஆனால், அவர்களின் ஓட்டுக்கு மட்டும், பல்லை
காட்டுகின்றனர். சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்து போராடி வரும், வன்னியர்
சமுதாயத்தில், 2.5 கோடி பேர் உள்ளனர். அவர்கள் ஓட்டுப் போட்டிருந்தாலே,
தமிழகத்தை, பா.ம.க., ஆட்சி செய்திருக்கும். தமிழகத்தில், சாராய விற்பனையே
சாதனையாக உள்ளது. ஜெயலலிதா அரசில், ஊழல் மலிந்து விட்டது. இலவசங்கள்
கொடுத்து, ஓட்டுகளை விலைக்கு வாங்குகின்றனர். லோக்சபா தேர்தலில், ஒரு
ஓட்டுக்கு, அ.தி.மு.க., 3,000 ரூபாயும், தி.மு.க., 2,000 ரூபாயும் கொடுக்க
திட்டமிட்டுள்ளன. தேர்தலில் பணப்புழக்கத்தை தடுப்பதில், தேர்தல் ஆணையம்
குரைக்கும் நாயாகவே, வேடிக்கை பார்க்கிறது; அது கடிக்கும் நாயாக மாற,
சட்டங்களை கடுமையாக்க வேண்டும். கிராமங்களில் உள்ள இளைஞர்கள், வாரம்
இருமுறை வீடுகள் தோறும் சென்று, எந்தக் கட்சி, என்ன ஜாதி என, பார்க்காமல்
காலில் விழுந்து கெஞ்சி, ஓட்டு கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது,
பெண்களும் வீடு, வீடாகச் சென்று, காலில் விழுந்து பா.ம.க.,வுக்காக, ஓட்டு
கேட்க வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் பேசினார்.
Comments