அதிகாரிகள் இடமாற்றம் :
நிர்வாக பதிவேட்டு குறிப்பின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான சேவையாற்றியவர்களில் 2139 அதிகாரிகள் 2013ம் ஆண்டு நவம்பர் 13 வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த விஜீத் சவுத்ரி என்பவர் அதிகபட்சமாக தான் பணியாற்றிய 31 ஆண்டுகளில் 52 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோரா விவகாரத்தில் புகழ்பெற்ற அரியானா ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கேம்கா இதுவரை 45 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக பதிவேட்டில் இடம்பெற்றுள்ள 2139 அதிகாரிகளில் 13 பேர் அதிகபட்சமாக 40 அல்லது அதற்கும் அதிகமான முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 7 பேர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் இமாச்சலையம், 2 பேர் ஜார்கண்ட்டையும், சேர்ந்தவர்கள். அரியானாவைச் சேர்ந்த முகம்மது ஷாயின் மற்றும் அசோக் கேம்கா இருவரையும் இந்தியாவிலேயே அதிகம் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஆவர். இவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றத்திற்கு காரணம் :
அதிகாரிகளின் இந்த தொடர் இடமாற்றத்திற்கு காரணம், அவர்களின்
நேர்மையின்மையா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என மத்திய ஐ.ஏ.எஸ்., கழக
செயலாளர் சஞ்சய் பூஷ்ரெட்டியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
நேர்மையான இவர்களைப் போன்ற அதிகாரிகளை அரசியல்வாதிகளுக்கு பிடிப்பதில்லை;
தங்களின் சுயலாபத்திற்காக அந்த குறிப்பிட்ட துறையை பலவீனமடையச் செய்வதற்காக
இத்தகைய நேர்மையான அதிகாரிகள் இடையூறாக இருப்பதாக அவர்கள்
மாற்றப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி நாக்பால் பணி நீக்கம் செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதும், பின்னர் பொதுநல ஆர்வலர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு துர்கா பணியில் சேர்க்கப்பட்டதே இதற்கு உதாரணமாக கூறப்படுகிறது.
உத்திர பிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி நாக்பால் பணி நீக்கம் செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதும், பின்னர் பொதுநல ஆர்வலர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு துர்கா பணியில் சேர்க்கப்பட்டதே இதற்கு உதாரணமாக கூறப்படுகிறது.
ஆய்வின் முடிவு :
மொத்தமுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் 14 சதவீதம் பேர் ஓராண்டுகளிலும், 54 சதவீதம் பேர் 18 மாதங்களிலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 68 சதவீதம் பேர் 18 மாதங்களுக்கும் குறைவாகவே ஒரு இடத்தில் பணியாற்றி உள்ளனர். 8 சதவீதம் பேர் மட்டுமே 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணி செய்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் அவர் சார்ந்த துறையின் பணிகள் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு, நிதி சுமையும் அதிகரிப்பதால் பலர் வேலையை விடும் நிலையும் ஏற்படுவதாக சஞ்சய் பூஷ்ரெட்டி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட துறையில் தொடர்பாக மக்களிடையே போதிய அறிவு இல்லாததால் அரசியல் தலையீடுகளும், ஆட்சி மாற்றத்தால் ஏற்படும் சிக்கல்களும் அதிகாரிகளை அலைக்கழிக்கப்பட முக்கிய காரணமாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிகம் மாற்றம் செய்யப்படுவதில் அரியானா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சட்டீஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இதற்கு மோசமான அரசியல் நிர்வாகமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையீட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க தனியொரு அமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே இத்தகைய அதிகாரிகளின் அடிக்கடி மாற்றத்தை தவிர்க்க முடியும். அதிகாரிகளின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இல்லாத வண்ணம், சுதந்திரமான தனித்துவம் வாய்ந்த அமைப்பின் கீழ் உயர்பதவி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
Comments