களை கட்டுகிறது அலங்காநல்லூர் 'ஜல்லிக்கட்டு': எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி ஏற்பாடு!

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற, மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா, இந்தாண்டு எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி நடக்கவுள்ளது. ஆடுகளம் காணவுள்ள காளைகளின் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களுக்கான பதிவு ஜன., 10 முதல் ஜன.,12 வரை நடக்கிறது.

சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, ஜல்லிக்கட்டு விழாக்களை நடத்த, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.
ஜன.,14ல் அவனியாபுரம், ஜன., 15ல் பாலமேடு, ஜன., 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா செலவுகளை, பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள கலெக்டர் சுப்பிரமணயன் உத்தரவிட்டுள்ளார்.


காளைகள் பதிவு:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.,16ல் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடியும். ஆடுகளம் காணவுள்ள காளைகளின் உரிமையாளர்கள், காளைகளின் போட்டோ, கால்நடை மருத்துவ குழுவின் சான்று, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் போலீஸ் டி.எஸ்.பி., காந்தசொரூபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான குழு முன்னிலையில் பதிவு செய்து வருகின்றனர்.சுற்றுச்சுவர் இடிந்தது: காளைகளை பதிவு செய்ய, அலங்காநல்லூர் வருவாய் அலுவலகம் முன், நேற்று முன்தினம் இரவு முதல் உரிமையாளர்கள் குவிந்தனர். நேற்று காலையில், வரிசையாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சுற்றுச்சுவரில் சாய்ந்தபடி நின்றபோது, சுவர் கீழே விழுந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இடிந்த சுற்றுச்சுவரை துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் வனிதா, வி.ஏ.ஓ., கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டனர்.
பதிவு செய்ய ஆர்வம்:

கண்ணன்,19, கல்லூரி மாணவர், வெள்ளியங்கிரி: சிறு வயதில் இருந்தே ஜல்லிக்கட்டு என்றால் ஆர்வம் அதிகம். நான் வளர்க்கும் காளையை களத்தில் இறக்கி விடுவதற்காக பதிவு செய்ய வந்தேன். எனது முரட்டுக்காளையை பிடித்து பார்க்கட்டும் பார்க்கலாம்.

மகாலிங்கம்,64, விவசாயி, பொதும்பு: ஏழு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் எனது காளை கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி வருகிறது. இந்தாண்டும் எனது காளை களம் காணவுள்ளது. பாசத்துக்கு கட்டுப்படும். முரண்டு பிடிப்பவர்களை முட்டித்தள்ளும். இந்த பிடிவாத காளையை பிடிக்க முடியுமா, என சவால் விட்டார்.
விழா ஏற்பாடுகள்:

சுந்தர்ராஜன், ஜல்லிக் கட்டு விழாக்குழு தலைவர், அலங்காநல்லூர்: இம்முறை ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட காளைகள் நிறுத்தி வைக்கப்படும். அங்கிருந்து 50 காளைகள் வீதம் வாடிவாசலுக்கு அனுப்பப்படும். இதனால், நெருக்கடி நீங்கி, அதிக காளைகளை அவிழ்த்து விட முடியும். காளைகளின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு விழாவிற்கு முந்தைய நாள் இரவு மற்றும் ஜல்லிக்கட்டு அன்று இலவச உணவு, குடிநீரும், மாடுபிடி வீரர்களுக்கு குடிநீர், மோர் வழங்கப்படும். பாக்கெட் குடிநீர் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இலவச கேலரியில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரலாம். அமைப்புகள் சார்பில் பரிசு பொருட்கள் வழங்க தடையில்லை. அவை குறித்து அறிவிக்கப்பட மாட்டாது. விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.

கீதா, பேரூராட்சி தலைவர், அலங்காநல்லூர்: நிர்வாகம் சார்பில் கேலரிகள் அமைக்கப்படும். குடிநீர், பொது சுகாதாரப் பணிகள் கூடுதல் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். காளைகளுக்கு இலவசமாக தீவனம், குடிநீர் வழங்கப்படும். வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதி வரை, தென்னை நார் அதிகளவு பரப்பப்படும். பேரூராட்சி நிர்வாக அலுவலர் ராஜா மேற்பார்வையில் பணிகள் நடக்கிறது. ஜல்லிக்கட்டு விழாவை கட்டுக்கோப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாடுபிடி வீரர்கள் பதிவு:

மாடுபிடி வீரர்களுக்கான பதிவு அலங்காநல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஜன., 10 முதல் ஜன., 12 வரை நடக்கிறது. 21 வயது முதல் 40 வயதுள்ளவர் பதிவு செய்யலாம். 2 பாஸ்போர்ட் போட்டோ, ரேஷன் கார்டு நகல் கொண்டு வர வேண்டும். போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சிறப்புக்காவல்படை, ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என மொத்தம் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

Comments