அமெரிக்காவில்
பணியாற்றிய, இந்திய தூதரக அதிகாரி, தேவயானியை அமெரிக்க அதிகாரிகள் கைது
செய்தனர்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால், இரு நாடுகள் இடையேயான
உறவு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில், அமெரிக்க தூதரகத்தால்
நடத்தப்படும், பள்ளிகளில், விசா மற்றும் பணியாளர் விவகாரங்களில் முறைகேடு
நடப்பதாக, மத்திய அரசு தெரிவித்தது. குறிப்பாக, டில்லியிலுள்ள அமெரிக்க
பள்ளி, விசா மற்றும் உள்ளூர் விதிகளை மீறியுள்ளதாக, மத்திய அரசு குற்றம்
சாட்டியது. இதையடுத்து, அமெரிக்கா, இந்தியாவுடன், தூதரக மட்டத்திலான பேச்சு
வார்த்தை நடத்தியது.இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், நிருபர்களிடம் கூறியதாவது: டில்லியிலுள்ள, அமெரிக்க தூதரக பள்ளி, தூதரகத்தால் நடத்தப்படவில்லை. இதில், மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள், அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இதுகுறித்து, இந்திய அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இப்பள்ளி, சர்வதேச கல்வி வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. தூதரக அதிகாரிகள், வர்த்தக துறையை சேர்ந்தவர்களின் குழந்தைகள், இந்த பள்ளியில் படிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, வெளியிட்ட செய்தியில், 'இந்த பள்ளி செயல்படும் இடம், அமெரிக்க அரசுக்கு சொந்தமானது' என, குறிப்பிட்டு இருந்தது.
Comments