தேர்தலில் தொடர் தோல்வி கண்டு வரும் பா.ம.க.,விற்கு, வரும் லோக்சபா
தேர்தல், மிகவும் முக்கியமானது என, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும்
கருதுகின்றனர். 6 சதவீத ஓட்டுகளை பா.ம.க., பெறாவிடில், மாம்பழம் சின்னம்
பறிபோகும் என்கிற சூழ்நிலையில் அவர்கள், வரும் தேர்தலை எதிர்கொள்ள
வேண்டியிருக்கின்றது. இதற்காக, முப்பதுக்கும் மேற்பட்ட ஜாதிய அமைப்புகளை
ஒன்று சேர்த்துக் கொண்டு, 'சமுதாய கூட்டணி' என்ற பெயரில் தேர்தலை சந்திக்க
முடிவெடுத்து அறிவித்தார் ராமதாஸ்.
இதற்கிடையில்,
பா.ம.க.,வை, பா.ஜ., கூட்டணியில் சேர்க்க, பலரும் முயற்சிக்க, என்ன
முடிவெடுப்பது என, முடிவெடுக்க முடியாமல், தடுமாறி வருகிறார், ராமதாஸ்.
பா.ம.க.,வுக்குத் தேவையான, 6 சதவீதம் ஓட்டுகள் என்பது, மற்ற ஜாதிகளின்
ஓட்டுகள் கிடைத்தால் மட்டுமே சாத்தியம் என்ற சூழ்நிலையில், இந்த சமுதாய
கூட்டணி தலைவர்கள் தன் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம் என, ராமதாஸ்
கருதுகிறார். இந்நிலையில், சமுதாய அமைப்புகள், ஜாதி கட்சிகளின்
தலைவர்களுக்கு வரும், 20ம் தேதி சென்னையில் தடபுடல் விருந்து அளிக்க,
பா.ம.க., ஏற்பாடு செய்துள்ளது. கூட்டணியில் சேர,'சீட்' பேரத்தை
அதிகரிக்கவே, இந்த தந்திரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஈடுபட்டுள்ளார்
என, விவரம் அறிந்த பலரும் சொல்கின்றனர். வரும், 20ம் தேதி சென்னையில் உள்ள
ஒரு ஓட்டலில், இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
இது
தொடர்பாக பா.ம.க.,வின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இரண்டு
விஷயங்களுக்காக, அனைத்து சமுதாய அமைப்புகளையும், தன் கையில் வைத்துக் கொள்ள
விரும்புகிறார் ராமதாஸ். அனைத்து வன்னிய இன மக்களையும், பா.ம.க.,வுக்கு
ஆதரவாக திருப்புவதோடு, மற்ற ஜாதி மக்களின் ஆதரவையும் பெறுவது என்ற முடிவோடு
தான், அனைத்து ஜாதி அமைப்புகளையும் ஒன்றிணைத்து, 'சமுதாயக் கூட்டணி'யை
உருவாக்கினார். அதோடு, வன்னியர்களின் ஓட்டுகளை மொத்தமாக பெற, அவர்களிடம்
பசும் பாலைக் கொடுத்து, சத்தியம் வாங்க ஏற்பாடு செய்தார். இதை கச்சிதமாக
செய்து முடித்தனர், பா.ம.க.,வினர். இதனால், தனித்துப் போட்டியிட்டாலும்,
குறிப்பிட்ட ஓட்டு வங்கி உறுதி என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி
அமைக்கப்பட்ட சமுதாயக் கூட்டணியை வைத்து, தேர்தலை சந்தித்தாலே, நாம் யார்
என்பதை நிரூபிக்க முடியும் என, குரு சொல்லிக் கொண்டிருக்கிறார்; ராமதாசும்
இதையே நினைக்கிறார். அதனால்தான், ஜாதிய அமைப்பினரோடு, தேர்தலை சந்திக்க
விரும்பி, அவர்களை தம் பக்கமே இறுத்திக் கொள்ள அவர்களை தொடர்ந்து சந்தித்து
வருகிறார். ஒருவேளை பா.ஜ.,வுடன் கூட்டணி சேரும் நிலை ஏற்பட்டால், மற்ற
ஜாதி ஓட்டு களும் தன்பக்கம் இருப்பதாக காட்டி, 'சீட்' பேரத்தை அதிகரிக்க
முடியும் என்கிற எண்ணத்திலும், அவர்களை பா.ம.க., பக்கமே வைத்திருக்கிறார்.
விருந்தின் போது, ஜாதிய அமைப்புகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை
உணர்த்தியே, அவர் பேசுவார். இவ்வாறு, அவர் கூறினார்.
Comments