வெற்றுப் பேச்சு: அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை; ஆட்சியில் 'ஆம் ஆத்மி' ஒரு மாதம் நிறைவு

புதுடில்லி: டில்லியில், மக்களின் ஏகோபித்த வரவேற்புக்கு இடையே, கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' அரசு பதவியேற்று, நேற்றுடன், ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், அந்த கட்சி சார்பில், மக்களுக்கு அளிக்கப்பட்ட, எந்த வாக்குறுதியுமே நிறைவேற்றப்படவில்லை. கெஜ்ரி வாலின் அறிவிப்புகள் எல்லாம், வெற்றுப் பேச்சாகி விட்டதால், டில்லி மக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

டில்லியில், காங்., ஆதரவுடன், கடந்த மாதம், 28ம் தேதி, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரி வால், முதல்வராகவும், அவரின் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், அமைச்சர்களாவும், பதவியேற்றனர். ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவி யேற்பு விழாவில், இதுவரை இல்லாத அளவுக்கு, மக்கள் திரண்டு, கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களிடையே முழங்கிய கெஜ்ரி வால், 'இனிமேல், டில்லியில் உள்ள ஒவ்வொரு மக்களும் முதல்வர் தான். ஊழலுக்கு எதிரான, ஜன்லோக்பால் மசோதா, விரைவில் நிறைவேற்றப்படும்' என்றார். அவரின் அறிவிப்பு, டில்லி மக்களிடையே, நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர், முதல்வராக பதவியேற்று, நேற்றுடன், ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால், மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிமே, நிறைவேற்றாமல், வழக்கமான அரசியல்வாதி போலவே, கெஜ்ரிவால் செயல்படுகிறார். கெஜ்ரிவால் கட்சியினரின் இந்த செயல்களால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியே, கடும் அதிருப்தி அடைந்தார். இதை, தன், குடியரசு தின விழா உரையில், மறைமுகமாக சுட்டிக் காட்டிய அவர், 'அராஜகவாதிகளால், ஒருபோதும், அரசுக்கு மாற்றாக செயல்பட முடியாது' என, நெத்தியடியாக குறிப்பிட்டார்.

கெஜ்ரிவாலின் அரசியல் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த, பத்திரிகையாளர்களையே, அவரும், அவரின் அமைச்சர் சோம்நாத் பார்தியும், 'மோடியிடம் பணம் வாங்கி விட்டனர்' என, விமர்சித்தது, அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. 'பதவியேற்ற, ஒரு மாதத்திற்குள்ளேயே, இவ்வளவு அதிருப்தியை சம்பாதித்துள்ள கெஜ்ரிவால், மீதமுள்ள பதவிக் காலத்தில், எவ்வளவு அதிருப்தியை எதிர்கொள்வாரோ' என, டில்லி மக்களிடையே பேச்சு எழுந்துள்ளது.

* ஊழல் தடுப்பு உதவி மையம்:

'அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீதான, லஞ்ச புகார்களை தெரிவிக்க, உதவி மையம் அமைக்கப்படும்' என, கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன்படி, உதவி மையம் அமைக்கப்பட்டாலும், பொதுமக்கள் அளித்த புகார்களின் மீது, இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

* மின் கட்டணம்:

மின் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டாலும், 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

* தண்ணீர் கட்டணம்:

'ஒவ்வொரு குடும்பத்துக்கும், தினமும், 700 லிட்டர் தண்ணீர், இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிப்பு வெளியிட்டாலும், பெரும்பாலான குடும்பங்கள், தினமும், 700 லிட்டர் தண்ணீருக்கு மேல் ஏற்கனவே பயன்படுத்துவதால், 'அரசின் அறிவிப்பால், எங்களுக்கு எந்த பயனும் இல்லை' என, கருதுகின்றனர்.

* சுகாதாரம்:

'குறிப்பிட்ட சில நோய்களுக்கான மருந்துகள், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

* ஜன்லோக்பால் மசோதா:

'பதவியேற்றதுமே, உடனடியான, ஜன்லோக்பால் மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஒரு மாதம் ஆகியும், இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

*பெண்கள் பாதுகாப்பு:

'பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிறப்பு கமாண்டோ பிரிவு உருவாக்கப்படும்' என்ற அறிவிப்பு, வெறும், வாக்குறுதியாகவே உள்ளது.

* ஜனதா தர்பார்:

'பொதுமக்களின் குறைகளை கேட்பதற்கு, ஒவ்வொரு வாரமும், பொது இடத்தில், முதல்வரும், அமைச்சர்களும், பங்கேற்கும் ஜனதா தர்பார் நடக்கும்' என, கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால், பதவியேற்றதும் நடந்த, முதல், ஜனதா தர்பாரிலேயே, கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதால், கெஜ்ரிவால், பாதியிலேயே ஓட்டம் பிடித்தார். இதையடுத்து, ஜனதா தர்பாரின் ஆயுசு, அல்பாயுசாகி விட்டது.

* இரவில் தங்கும் வசதி:

'வீடுகள் இல்லாதோர், இரவில் தூங்குவதற்கான கூடங்கள் அமைத்து தரப்படும்' என, அறிவிக்கப்பட்டது. கூடங்கள் அமைப்பதற்கு பதிலாக, காலாவதியான, ஒரு சில பஸ்களுக்குள், மக்களை தூங்கும்படி, அதிகாரிகள், மக்களை கட்டாயப்படுத்துகின்றனர்.

* உட்கட்சி தகராறு:

ஆம் ஆத்மி கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, வினோத் குமார் பின்னி, கெஜ்ரிவால், அராஜகமாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக, உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால், கட்சியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வினோத் குமார் பின்னி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

* அமைச்சர்களின் அத்துமீறல்:

சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, போதை மருந்து கடத்தலை தடுப்பதாக கூறி, உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்களிடம், தரக் குறைவாக நடந்து கொண்ட விவகாரம், கோர்ட் படி ஏறியுள்ளது. பெண்கள் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள், அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர், ராக்கி பிர்லாவும், சோதனை என்ற பெயரில், அத்துமீறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

*போலீஸ் பகை:

டில்லியில், போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதை, தங்கள் கட்டுப்பாட்டில் விட வலியுறுத்தி, கெஜ்ரிவால் நடத்திய தர்ணா போரட்டத்தால், டில்லியே ஸ்தம்பித்தது. அவரின் இந்த நடவடிக்கை, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், டில்லி போலீசாருடன், பகையையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments