அங்கு, கூடியிருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது முன்னோர்களின் ஆன்மா, சாந்தியடைய வேண்டி, திதி பூஜை செய்து, அக்னி தீர்த்த கடலில், புனித நீராடினர்.
பின்னர், கோயிலில் உள்ள, 22 புனித தீர்த்தங்களில், நீண்ட வரிசையில் காத்திருந்து, நீராடினர். அதே சமயம், பக்தர்கள், சாப்பாடு கூடம், குடிநீர், கழிப்பறை வசதியின்றி தவித்தனர்.
திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில், நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு, கடலில் புனித நீராடிவிட்டு, முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். காலை 7:00 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
ஏரல்: ஏரலில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.பின்னர், சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் நடந்த சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதணையில் பங்கேற்று வழிபட்டனர், தூத்துக்குடியிலும், கடற்கரை பகுதி, துறைமுக பார்க் பகுதி, தாமிரபரணி ஆற்று கரையோர்களில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தை அமாவாசை: தேவிபட்டினம் சேதுக்கரையில் புனித நீராடிய பக்தர்கள்
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் புனித நீராடி, திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். பின்னர், அங்குள்ள ஆஞ்ச நேயர் கோயிலில் வழிபட்டனர்.
அமாவாசையன்று திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் பெருமாள் சுவாமி கோயிலில், சுவாமி தரிசனம் செய்து, அங்கு வழங்கப்படும் பாயாசம் அருந்தினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் பிரசாதம் அருந்தினர்.
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். கடலுக்கடியில் அமைந்துள்ள நவபாஷாணத்தை சுற்றி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இங்கும் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
Comments