புதுடில்லி: 'இத்தாலி கடற்படையினர் பிரச்னைக்கு, சரியான முறையில் தீர்வு
காண வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த,
2012ல், கேரளாவில், இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய, இத்தாலி
கடற்படையினர், இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து,
இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரை, இந்திய அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில், கடற்கொள்ளையர்கள் என கருதி, மீனவர்களை சுட்டுக் கொன்றதாக,
இத்தாலி கடற்படையினர் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விவகாரங்களை
கையாளும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், இந்த வழக்கு, நீதிபதிகள்,
பி.எஸ்.சவுகான், செலமேஷ்வர் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று
விசாரணைக்கு வந்தது.
அப்போது, இத்தாலி
வீரர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், முகுல் ரத்தோகி, ''மத்திய
அரசிடம், இந்த வழக்கை ஒப்படைத்து, ஓர் ஆண்டு ஆகிறது. ஆனாலும், இன்னும் இந்த
வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இத்தாலி வீரர்கள்,
இரண்டு ஆண்டுகளாக, இதற்காக காத்திருக்கின்றனர்,'' என்றார். அப்போது, மத்திய
அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வாகனவதி, ''இந்த
வழக்கின் சாட்சிகள் சிலர், கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் தான்,
தாமதமாகிறது. இந்த பிரச்னைக்கு, தீர்வு காண முயற்சித்து வருகிறோம்,''
என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள், 'இந்த பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதாக, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதனால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அந்த தீர்வு, சரியானதாக இருக்க வேண்டும்' என்றனர்.
Comments