தேசிய அரசியலில் ஈடுபடும் ஆர்வம், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினுக்கு
ஏற்பட்டுள்ளது. அந்த ஆர்வத்தை, வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த
பேட்டியில், வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த பேட்டியில், 'தேசிய அரசியலுக்கு வரும் தருணமாக, இதை நீங்கள் கருதுகிறீர்களா? ஏன் தேசிய அரசியலுக்கு நீங்கள் வரக்கூடாது?' என்ற கேள்விக்கு, ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:
தி.மு.க.,வின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று, மாநிலத்தில்
சுயாட்சி;மத்தியில் கூட்டாட்சி. எனவே, தேசிய அரசியலில் ஏற்கனவே, தி.மு.க.,
கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தது.கூட்டணி இல்லாத
சூழ்நிலையிலும், பார்லிமென்டில், பல திட்டங்கள் கொண்டு வரவும், பல
மசோதாக்கள் நிறைவேறவும், தி.மு.க., துணையாக இருந்துள்ளது. எனவே, நான்,
தேசிய அளவில் வருவது என்பதை பொறுத்தவரை ஒன்றும் வியப்பல்ல; வரலாம்.இவ்வாறு,
ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.அந்த பேட்டியில், 'தேசிய அரசியலுக்கு வரும் தருணமாக, இதை நீங்கள் கருதுகிறீர்களா? ஏன் தேசிய அரசியலுக்கு நீங்கள் வரக்கூடாது?' என்ற கேள்விக்கு, ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:
இந்த பதில், தேசிய அரசியல் பக்கம் திரும்பும் ஆர்வம், அவருக்கு இருப்பதை வெளிப்படுத்தி உள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அதற்கு காரணம், தேசிய அரசியல் என்ற பெயரில், கட்சியில் இன்னொரு, 'பவர் சென்டர்' உருவாகக் கூடாது என, அவர் விரும்புகிறார் என்கின்றனர்.
அதே நேரத்தில் இன்னொரு காரணமும் ஸ்டாலின் ஆதரவாளர் தரப்பில் கூறப்படுகிறது. அது, பிரதமர் போட்டியில், ஜெயலலிதாவுக்கு எதிராக களம் இறங்குவது தான் ஸ்டாலின் திட்டம் என்கின்றனர்.முதல்வர் ஜெயலலிதா, தேசியஅரசியலுக்கு போகும் முடிவில் இருக்கிறார். பிரதமர் ஆக வேண்டும் எனவும் விரும்புகிறார். அவருக்கு எதிராக, அந்த போட்டியில் குதிக்க, ஸ்டாலின் விரும்புவதையே இது காட்டுகிறதுஎன்கின்றனர்.
இதுகுறித்து, தி.மு.க.,வினர் மேலும் கூறியதாவது: டில்லியில், 'லாபியிங்' செய்வற்கு தகுதியானவர் தேவை என்பதால், கனிமொழியை எம்.பி.,யாக்கி, தேசிய அரசியலுக்கு தி.மு.க., அனுப்பி வைத்தது. அதை வலுவாக பிடித்து, கட்சியில் தனக்கென ஆதரவு வட்டத்தை கனிமொழி உருவாக்கி விட்டார்.அதேபோல், அழகிரியும் மத்திய அமைச்சர் என்ற முறையில், டில்லியில் வலம் வந்தார். ஆனால், அவரால், தேசிய அரசியலில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதை தனக்கு சாதகமாக்கிய கனிமொழி, கட்சியின் அதிகாரப்பூர்வ, டில்லி நடவடிக்கைகளுக்கு கூட தலைமை ஏற்க துவங்கினார்.இதனால், அதிருப்தி அடைந்த ஸ்டாலின், இந்த முறை, தேசிய அரசியலில் கனிமொழியின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என,காய் நகர்த்தி வருகிறார்.கடந்த ஞாயிறன்று, சென்னையில், கனிமொழி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடந்தன. அதை புறக்கணிக்கும் நோக்கில், கோவையில் இளைஞரணி கூட்டத்தை நடத்தினார், ஸ்டாலின். இதனால், கனிமொழிக்கு வாழ்த்து சொல்ல, ஸ்டாலின் போக மாட்டார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி தலைமையின் வற்புறுத்தல் காரணமாக, சனிக்கிழமையே, கனிமொழியை சந்தித்து வாழ்த்து கூறி விட்டு, கோவை போய் விட்டார்.
அதேநேரத்தில், கனிமொழிக்கு வாழ்த்து சொல்ல, கட்சியின் மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் செல்வதற்கும் தடை போட்டு விட்டார். அதையும் மீறி, இரண்டு மாவட்டசெயலர்கள் மட்டுமே, கனிமொழிவீட்டுக்கு வந்து, வாழ்த்து கூறினர்.சென்னையில் உள்ள நிர்வாகிகளில், பகுதி செயலர்கள், இரண்டு பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்றவர்கள் எவரும் வரவில்லை. எப்போதும் போல், கனிமொழியின் ஆதரவாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். இதெல்லாம் கனிமொழியின் வளர்ச்சிக்கு போடப்பட்ட தடை.இந்த பின்னணியில் தான், தேசிய அரசியலில் தாம் ஈடுபடுவது ஒன்றும் வியப்பல்ல என்றும், எந்த நேரத்திலும் இறங்கலாம் எனவும் கூறியிருக்கிறார்.இவ்வாறு, தி.மு.க.,வினர்தெரிவித்தனர்.
Comments