பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் சுத்தமாக இருக்க சில டிப்ஸ்...

பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், உடலில் நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். மேலும் 10 மாதத்திற்கு பின் உடலானது சாதாரண நிலைக்கு மாறும் நிலையில் இருப்பதால், ஒவ்வொரு பெண்ணும் பிரசவம் முடிந்த பின் தம்மை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் பலர் குழந்தை பிறந்த பிறகு, குழந்தையை கவனமாக பார்த்துக் கொண்டு, தங்களை கவனித்துக் கொள்ளமாட்டார்கள். அப்படி பெண்கள் தங்களை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால், அது குழந்தைக்கும் தான் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும். எனவே ஒவ்வொரு பெண்ணும், பிரசவத்திற்கு பின், ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி சுத்தமாக இருப்பது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது. சரி, இப்போது பிரசவம் முடிந்த பெண்கள் தங்களை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒருசிலவற்றைக் கொடுத்துள்ளோம். அவை உங்களுக்கு சிரிப்பாகவும், சாதாரணமாகவும் இருந்தாலும், இப்படி இருப்பது தான் சிறந்ததும், ஆரோக்கியமானதும் கூட.

கைகளை கழுவவும்
 
பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கைகளை கழுவுவது முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே எப்போதும் சாப்பிடும் முன்பும், குழந்தைகளின் துணியை துவைத்தப் பின்னரும், கழிவறை சென்று வந்த பின்னரும் நன்கு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.

கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
 
பிரசவத்திற்கு பின்னர் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். எனவே கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எப்போதும் சிறுநீர் கழித்த பின்னர், வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி, டிஷ்யூ கொண்டு துடைத்துவிட வேண்டும்.

தண்ணீர் அதிகம் பருகவும்
 
பிரசவம் முடிந்த பின், அடிக்கடி சிறுநீர் வெளியேற்றுவதால், உடலில் நீர்ச்சத்தானது குறைய ஆரம்பிக்கும். எனவே இக்காலத்தில் பெண்கள் தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் சிறுநீர் பையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமலும் இருக்கும்.

மார்பகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
 
பிரசவத்திற்கு பின் பெண்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதால், மார்பகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு குழந்தைக்கு பால் கொடுத்த பின்னர், தண்ணீர் கொண்டு மார்பகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

பிறப்புறுப்பு பராமரிப்பு
 
பிரசவத்தின் போது சிலருக்கு பிறப்புறுப்பில் தையல்கள் போடப்பட்டிருக்கும். அந்த தையல் குணமாவதற்கு சற்று நாட்கள் ஆகும். எனவே தினமும் தவறாமல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட முறை தண்ணீர் கொண்டோ அல்லது நீர்த்துப்போன ஆன்டி-செப்டிக் கொண்டோ கழுவலாம்.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தக்கசிவு
 
சிலருக்கு பிரசவத்திற்கு பின் அதிகப்படியான இரத்தக்கசிவு ஏற்படும். அதிலும் குறைந்தது 2 வாரமாவது இரத்தக்கசிவு ஏற்படும். அப்படி இரத்தக்கசிவு ஏற்பட்டால், தினமும் 2-3 முறையாவது பேடுகளை மாற்ற வேண்டும்.

சிசேரியன் பிரசவமானால்...
 
சிசேரியன் பிரசவம் நடந்திருந்தால், அவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு வயிற்றில் போடப்பட்ட தையல் குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனவே அத்தகையவர்கள் குழந்தையை தூக்கும் போதோ அல்லது பால் கொடுக்கும் போதோ வயிற்றில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஓய்வு மற்றும் உடற்பயிற்சி
 
பிரசவத்திற்கு பின் உடலானது மிகவும் சோர்ந்து இருப்பதால், உடலுக்கு அதிகப்படியான ஓய்வு மற்றும் ஒருசில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன், மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.

சுத்தமான உணவு
 
எந்த ஒரு பழங்கள் மற்றும் காய்கறிகளையும் நீரில் நன்கு கழுவியப் பின்னரே சாப்பிட வேண்டும். குறிப்பாக உணவுகளை சமைக்கும் போது, உணவானது நன்கு வெந்த பின்னரே சாப்பிட வேண்டும்.

குழந்தையை பார்க்க வருபவரின் சுத்தமும் அவசியம்
 
முக்கியமாக பிரசவம் முடிந்த பின்னர் குழந்தையைப் பார்க்க பலர் வருவார்கள். அப்படி வருபவர்கள் நிச்சயம் குழந்தையை தூக்க ஆசைப்படுவார்கள். அது தப்பில்லை. ஆனால் அவர்களிடம் குழந்தையை அதிகம் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஒருவேளை அப்படி தூக்கவிடுவதாக இருந்தால், அவர்களை கைகளை நன்கு கழுவி பின் தூக்குமாறு சொல்லுங்கள். குறிப்பாக உடல்நலம் சரியில்லாதவர்கள் உங்கள் அருகில் வராதவாறு பார்த்துக் கொள்வது நல்லது.

Comments