தனித்து போட்டியிட போவதாக மம்தா அறிவிப்பு

கோல்கட்டா: லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகள், பல மாதங்களுக்கு முன் துவக்கி விட்ட நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று துவக்கினார். லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.


மேற்கு வங்க மாநிலத்தில், 32 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இறக்கி, மூன்றாண்டுகளுக்கு முன், ஆட்சியைப் பிடித்த, மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் அங்கு நடந்த, பஞ்சாயத்து தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், தேசிய கட்சிகளான, பா.ஜ.,வும், காங்கிரசும், பல மாதங்களுக்கு முன்பே தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், மம்தா, சற்று தாமதமாக, நேற்று பிரசாரத்தை துவக்கினார்.

"தியாகிகள் தின விழா' : கோல்கட்டாவின், ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடந்த, பிரமாண்ட பேரணியில் அவர் உரையாற்றினார். வழக்கமாக, ஜூன், 21ம் தேதி நடத்தப்படும், அக்கட்சியின், "தியாகிகள் தின விழா' கொண்டாடப்பட்டது.

இதில், மம்தா பேசியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான, பா.ஜ.,வுக்கு எதிரான நம் போராட்டம் தொடரும். அது போல், ஊழலுக்கு எதிரான நம் போராட்டமும் தொடரும். மத கலவரங்களை ஊக்குவிக்கும் அரசு, நமக்கு தேவையில்லை. காங்கிரசுக்கு, பா.ஜ., மாற்று கட்சியல்ல. அது போல், பா.ஜ.,வுக்கும், காங்கிரஸ் மாற்றல்ல.

நாடு முழுவதும் :

கூட்டாட்சி முன்னணி ஏற்படுத்தப்படும். அதன் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்., கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். நாடு முழுவதும் நானே சென்று பிரசாரம் மேற்கொள்வேன். இவ்வாறு மம்தா பேசினார். மம்தாவுக்கு போட்டியாக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, பிப்ரவரி, 5 மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், 9ம் தேதிகளில், கோல்கட்டாவில் பிரமாண்ட பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.

Comments