அதிகளவு மருந்தை உட்கொண்டதால் சுனந்தா மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

புதுடில்லி: டில்லி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்த மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், அதிகளவு மருந்தை உட்கொண்டதால் தான் மரணமடைந்தார் எனவும், அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஐ.நா., உயரதிகாரியாக பணியாற்றியவர், கேரளாவைச் சேர்ந்த சசி தரூர், 57. இவர், காஷ்மீரைச் சேர்ந்த, சுனந்தா புஷ்கரை, 52, கடந்த, 2010ல், திருமணம் செய்தார். இரண்டு பேருக்குமே, இது, மூன்றாவது திருமணம். சசி தரூருக்கு, முந்தைய திருமணத்தின் மூலம், இரண்டு மகன்களும், சுனந்தாவுக்கு, இரண்டாவது கணவர் மூலம், ஒரு மகனும் உள்ளனர்.

புயல்: காதலும், பாசமுமாக சென்று கொண்டிருந்த, சசி தரூர் சுனந்தா வாழ்க்கையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், மெர் தரார் உருவத்தில், புயல் வீசியது.மெர் தராருக்கும், சசி தரூருக்கும், கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், மெர் தரார், சசி தரூரை, தன்னிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும், சமீபத்தில், சுனந்தா, "டுவிட்டரில்' பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.இந்த விவகாரத்தால், சசி தரூர் சுனந்தா இடையில் கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், டில்லியில் உள்ள சசி தரூரின் வீட்டில், வெள்ளையடிப்பு வேலை நடந்ததால், 16ம் தேதி, இருவரும், லீலா பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டலில், அறை எடுத்து தங்கியிருந்தனர். டில்லியில் நடந்த காங்., பொதுக் குழு கூட்டத்துக்கு, சசி தரூர் கிளம்பிச் சென்றார். சுனந்தா மட்டும், தனியாக அறையில் தங்கியிருந்தார். பகல், 3:30 மணியளவில், தன் அறைக்கு முன் உள்ள வராண்டாவில், சுனந்தா நின்று கொண்டிருந்தார். இதை, ஓட்டல் ஊழியர்கள் பார்த்தனர். பின், தன் அறைக்குள் சென்று விட்டார்.காங்., கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இரவு, 8:30க்கு, சசி தரூர், அறைக்கு திரும்பினார். அறை, உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், ஓட்டல் ஊழியர்களுக்கு, சசி தரூர் தகவல் தெரிவித்தார். அவர்களின் உதவியுடன், கதவு திறக்கப்பட்டது.அறைக்குள், சுனந்தா, படுக்கையில் பிணமாகக் கிடந்ததை பார்த்து, கடும் அதிர்ச்சி அடைந்த சசி தரூர், தன் உதவியாளர் மூலமாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வந்து, சுனந்தாவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.சுனந்தாவின் உடலை, மூன்று டாக்டர்கள் அடங்கிய குழு, பிரேத பரிசோதனை செய்தது.

சசி தரூரிடம் விசாரணை: சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக டில்லி துணை கலெக்டர் விசாரணை நடத்தினார். சசி தரூரிடமும் அவர் விசாரணை செய்து, வாக்குமூலத்தை பதிவு செய்தார். தனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்தது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு எழுதிய கடிதத்தில் சசி தரூர் கூறியிருந்தார்.

அறிக்கை தாக்கல்: இந்நிலையில் இன்று மாலை சுனந்தா புஷ்கர் மரணமடைந்தது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை துணை கலெக்டரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், சுனந்தா புஷ்கர் அதிகளவு மருந்தை உட்கொண்டதால் தான் மரணமடைந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் உள்ளதாவும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புஷ்கர் மரணமடைந்த அறையை சோதனையிட்ட துணை கலெக்டர் மற்றும் போலீசார், அறையிலிருந்து மன அழுத்தத்திற்கான மருந்து மற்றும் சில மருந்து மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments