மதுரை:
மதுரையில், பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த, வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் அரசு பஸ்சில் நின்று கொண்டும், படிக்கட்டிலும் உட்கார செய்தும்,
விழா நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.பொங்கல் விழாவில்
ஒவ்வொரு ஆண்டும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பங்கேற்க வைத்து, நம்நாட்டு
பாரம்பரியங்களை தெரிந்து கொள்ளும் வகையில், பல நிகழ்ச்சிகள் சுற்றுலா துறை
சார்பில் நடத்தப்படுகின்றன.
நேற்று அலங்காநல்லூர் அருகே
புதுப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்காக, பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள
சுற்றுலாத்துறை அலுவலகத்திலிருந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன. வெளிநாட்டினர் பலர் தனியாக கார், பஸ்களில்
வந்திருந்தனர். சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு
டவுன் பஸ்சில், சிபாரிசு அடிப்படையில் வந்த உள்ளூர் மக்கள் பலர்,
இருக்கைகளை ஆக்கிரமிக்க, வெளிநாட்டினர் நின்று கொண்டும், படிக்கட்டிலும்
அமர்ந்து பயணம் செய்தனர்.அவர்கள் கூறுகையில், ""முன்கூட்டியே வாகனம் ஏற்பாடு செய்யப்படவில்லை என தெரிவித்திருந்தால், நாங்கள் தனியாக வாகனங்களில், எங்கள் செலவில் வந்திருப்போம். 45 நிமிட பயணம் என்பது களைப்பை ஏற்படுத்தியது. இப்படி எங்குமே நாங்கள் பயணித்தது இல்லை''. என நொந்துக்கொண்டனர்.
புதுப்பட்டியில் அவர்களுக்கு மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது உடன் வந்த உள்ளூர் பெண்களும் மாலை கேட்டு வாங்கி அணிந்து கொள்ள, வெளிநாட்டினர் பலருக்கு மாலைகள் கிடைக்கவில்லை. இதே போன்று கலை நிகழ்ச்சிகள் நடந்த மைதானத்திலும் இருக்கைகள் இல்லாமல், பல வெளிநாட்டினர் மண் தரையில் அமர்ந்திருந்தனர். விழாவிற்காக தேர்வு செய்ய பட்ட இடத்தில் வெயில் அதிகம் இருந்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜான் பீட்டர் மயக்கமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் குழு இல்லை. முத்தமிழ் மன்றத்தை சேர்ந்த டாக்டர் தனசேகரன், அவரை பரிசோதித்தார். நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் பங்கேற்க இந்த விழா மைதானம் பகுதியில் ஒரு போலீஸ் கூட பாதுகாப்பிற்கு இல்லை. மைதானத்தில் கிராம மக்கள் கூடி நிற்க, கலை விழாவை வெளிநாட்டினர் ரசித்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கிடா முட்டு நிகழ்ச்சி நடந்த இடத்திலும் முதலுதவிக்காக எந்த ஏற்பாடும் இல்லை. பல நிலைகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, வசதி குறைவுகள் ஏற்பட்டன. தனியாக வாகனங்களில் வந்தவர்கள் சிலர் நிகழ்ச்சி முடியும் முன்னரே ஓட்டலுக்கு கிளம்பினர். இந்த விழாவை சம்பிரதாயமாக நடத்தும் சுற்றுலாத்துறை, வரும் ஆண்டுகளிலாவது அவர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
சுற்றுலாத்துறை அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் கூறுகையில், ""விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. ஒரு பஸ்சில் மட்டும் சிறு நெருக்கடி ஏற்பட்டது. விழா நடந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்ததால்தான் போலீசார் வரவில்லை,'' என்றார்.இன்று (ஜன., 16ல்) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கும் சுற்றுலாத்துறை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்கிறது. இன்றாவது போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பார்களா?
Comments