லோக்சபா தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் புதிய முறை

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தல், முன்னெப்போதும் நடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல், வித்தியாசமான தேர்தலாக அமையும் என்பது, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

கட்சி துவக்கி, ஓராண்டிற்குள், டில்லியில் ஆட்சியைப் பிடித்துள்ள, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியின் அணுகுமுறை மற்றும் வியூகத்தை பின்பற்ற, காங்கிரஸ் - பா.ஜ., ஆகிய முக்கிய கட்சிகள் முடிவு செய்து உள்ளன.



சிபாரிசு:
சட்டசபை, லோக்சபா என, எந்த தேர்தலாக இருந்தாலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, டில்லியில் உள்ள கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். ஒவ்வொரு கோஷ்டியினரும், தங்களுக்கு வேண்டியவர்கள் பெயர்களை, சிபாரிசு செய்து, பட்டியல் கொடுப்பர். அதில் இருந்து, குறிப்பிட்ட சிலரை, வேட்பாளர்களாக, கட்சி மேலிடம் அறிவிக்கும்.இது தான், இது வரை, வழக்கமாக, காங்கிரஸ் பின்பற்றி வந்த, வேட்பாளர் தேர்வு முறை. ஆனால், இந்த முறை, ஊழல்பேர்வழிகள், கிரிமினல்கள் போன்ற வர்களுக்கு, தேர்தலில் போட்டியிட, 'டிக்கெட்' கிடைக்காது என்பது, இப்போதே உறுதியாகி உள்ளது.அதே நேரத்தில், நேர்மையானவர்களை, கட்சிகளில் தேடிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது. இதற்காக, காங்கிரஸ் கட்சி, அமெரிக்க தேர்தல் முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை, 'பிரைமரி' என்ற முறையில் தேர்ந்தெடுக்கின்றன. போட்டியிடுபவரை, கட்சியே முடிவு செய்யாமல், கட்சியின் அனைத்து மட்டத்தினரும் தேர்ந்து எடுக்கும் வகையில், இந்த முறை அமைந்திருக்கும்.
படிப்படியாக...:

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களின் பெயர்கள், கட்சியின் கீழ் மட்டத்தில் தெரிவிக்கப்படும். கிராமம், வட்டாரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில், வேட்பாளர், படிப்படியாக தேர்வு செய்யப்படுவார். கட்சி மட்டத்தில், கிராமங்களில் துவங்கி, தேசிய அளவில் வரை, தேர்ந்தெடுக்கப்படும் நபர் தான், அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இந்த, பிரைமரி தேர்வில் வெற்றி பெறாதவர்களால், தேர்தலில் போட்டியிட முடியாது.இந்த முறையை, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் பின்பற்ற உள்ளது. அப்படியே, அமெரிக்க, பிரைமரி முறையை பின்பற்றாமல், நம் நாட்டிற்கு ஏற்ப, சற்றே வித்தியாசமான அணுகுமுறையுடன், காங்கிரஸ் துணைத் தலைவரும், கட்சியின் பிரசாரக் குழு தலைவருமான, ராகுல் தலைமையிலான அணி, வேட்பாளர்களை தேர்வு செய்ய, தயாராக உள்ளது.குறிப்பாக, போட்டியிட விரும்பு பவர்கள் பட்டியலை அல்லது போட்டியிட, கட்சி நிறுத்தலாம் என, கருதும் வேட்பாளர்களின் பெயர்களை, கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும், தொண்டர்கள் தேர்ந்தெடுத்து, இறுதியாக, அதிக ஓட்டு பெறுபவர், வேட்பாளராக அறிவிக்கப்படுவர்.
பட்டியல்:

உதாரணமாக, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட விரும்பு பவர்கள் யார், யார் என்ற விவரத்தை, அந்த தொகுதிக்கு உட்பட்ட, ஒவ்வொரு வார்டில் உள்ள, காங்கிரசாருக்கு தெரிவித்து, அவர்களின் ஓட்டுகளைப் பெற்று, அதிக ஓட்டின் அடிப்படையில், வேட்பாளர் முடிவு செய்யப்படுவார்.வார்டு, ஊர், தாலுகா, மாவட்டம் என, கட்சியின் பல்வேறு அமைப்பு களில், போட்டியிட விரும்புபவர்களின் பட்டியல், சுற்றுக்கு விடப்பட்டு, வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். இந்த, பிரைமரி முறையில், தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களைத் தான் கட்சி நிறுத்தும். அதில், கட்சித் தலைவரே நினைத்தாலும், மாற்றம் செய்ய முடியாது. முதற்கட்டமாக, 14 லோக்சபா தொகுதிகளில், இந்த, பிரைமரி முறை பின்பற்றப்பட உள்ளது. இந்த முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் நபர் தான், அந்த தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார்.இந்த முறையில் தான், வேட்பாளர்கள் தேர்வு நடக்கும் என, கடந்த, 2013ம் ஆண்டு, ஜெய்ப்பூரில் நடந்த, காங்கிரஸ் சிந்தனையாளர்கள் மாநாட்டிலேயே முடிவு செய்யப்பட்டது. ஆனால், 'இந்த முறை, நம்ம ஊருக்கு சரிப்பட்டு வராது' என, கட்சியினர் தெரிவித்ததால், மூட்டை கட்டி வைக்கப்பட்டது.
மேலிட அனுமதி:

டில்லியில், இதுபோன்ற முறையில், வேட்பாளர்களை தேர்வு செய்து போட்டியிட்டதால் தான், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது என்பதை அறிந்ததும், இந்த, புதிய முறையில், வேட்பாளர்களை தேர்வு செய்ய, கட்சி மேலிடம் அனுமதி அளித்து உள்ளது.இதற்கான பணிகளை, காங்கிரசின், அரசியல் விவகாரக் குழு மேற்கொண்டு வருகிறது.
'பிரைமரி'க்கு தேர்வாகியுள்ள தொகுதிகள்:

கட்சி மேலிடம், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குப் பதில், அந்தந்த பகுதி, கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் துவங்கி, மேல் மட்டம் வரை, வேட்பாளர்களை தேர்வு செய்யும், 'பிரைமரி' தேர்வு முறை, கீழ்கண்ட, லோக்சபா தொகுதிகளில் நடைபெற உள்ளது.இதில் கிடைக்கும் பதிலைப் பொறுத்து, அடுத்த, சில மாதங்களில், காங்கிரஸ் போட்டியிட உள்ள, பிற தொகுதிகளிலும் நடத்த, கட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடகா-வடக்கு கர்நாடகா, தக் ஷிண கன்னடா
உத்தர பிரதேசம்-வாரணாசி, சந்த்கபீர் நகர்
மத்திய பிரதேசம்-இந்தூர், ஹோசனாபாத்
ராஜஸ்தான்-ஜுன்ஜுனு
குஜராத்- பவ்நகர், வதோதரா
மகாராஷ்டிரா-துலே மற்றும் அவுரங்காபாத்
அரியானா -குர்கான்
அசாம் -கவுகாத்தி
மேற்கு வங்கம்-கோல்கட்டா வடக்கு

Comments