மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை: சோனியா ஒப்புதல்

புதுடில்லி: நாட்டை பா.ஜ., துண்டாட நினைக்கிறது என்றும், அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே காங்கிரசின் நோக்கம் என்றும், மதச்சார்பின்மையே எங்களின் அடையாளமாக இருக்கும் என்றும் மக்கள் எதிர்பார்பை நாங்கள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. என்றும் இன்றைய காங்., கமிட்டி கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா பேசினார்.

இந்த கூட்டத்தில் சோனியா பேசியதாவது: ஜவஹர்லால் நேரு ஏற்கனவே கூறியிருப்பதை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன், ஆபத்தை எதிர்கொள்வதும் அதனால் ஏற்படும் அசாதாரண சூழலை சந்திப்பதும் காங்கிரசுக்கு ஒன்றும் புதிதல்ல. இதனை எதிர்கொள்ளும் வலிமை காங்கிரசுக்கு உண்டு. கடினமான கால கட்டங்களை கடந்து தான் காங்கிரஸ் வந்திருக்கிறது. இந்த கடின நேரத்தையும் காங்., எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. எனவே வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் போராட்டத்திற்கு தயாராகி விட்டோம்.

ராகுல் பிரசார குழு தலைவர் என்பதில் மாற்றம் இல்லை. இது இறுதியானது. வரும் கால போராட்டம் மதச்சார்பை உறுதி செய்யும் விதமாக இருக்கும். சித்தாந்தம் என்பது முக்கிய பொருளாக இருக்கும்.

நாட்டில் ஊழலை ஒழிக்க வரலாற்று சிறப்பு மிக்க லோக்பால் மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றி இருக்கிறது. இது கொண்டு வருவதற்கு நான் அனைத்துக்சட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தேன். மேலும் நடைமுறைக்கு கொண்டு வர அனைவரும் இன்னும் ஆதரவு அளிக்க வேண்டும். காங்., ஆளும் மாநிலங்களில் இந்த மசோதா லோக்அயுக்தா மற்றும் இது தொடர்பான சரத்துக்கள் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் மகளிருக்கான சுய வேலை வாய்ப்பை காங்., உருவாக்கி இருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பல்வேறு நன்மை பயக்கும் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளோம்.

'மதச்சார்பின்மையே எங்களின் அடையாளம் '-நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என காங்., விரும்புகிறது. இதற்கென காங்., பாடுபட்டு வருகிறது. எதிர்கட்சியினர் நாட்டை துண்டாட நினைக்கின்றனர். பா.ஜ., வன்முறையை தூண்டி வருகிறது. மதம், சாதி முறையில் வன்முறையை தூண்டி வருகிறது. மதச்சார்பின்மையே எங்களின் முக்கிய குறிக்கோள். இதற்கென நாங்கள் போராடுவோம். வகுப்பு வாதம் நாட்டின் அச்சுறுத்தலாக உள்ளது. மதவாதத்தை நாம் எவ்வாறு பொறுத்து கொள்ள முடியும் ? மதச்சார்பின்மையே எங்களின் அடையாளமாக இருக்கும். இது அரசியல் தந்திரம் அல்ல. இவ்வாறு சோனியா பேசினார்.

வந்தே மாதரம் என்ற பாடலுடன்: காங்., பிரசார குழு தலைவராக ராகுல் அறிவிக்கப்பட்ட மறுநாளான இன்று டில்லியில் காங்., கமிட்டி கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

காலை 10. 30 மணியளவில் வழக்கம்போல் அனைத்து நிர்வாகிகளும் அமர்ந்த நிலையில் இந்த கூட்டம் துவங்கியது. துவங்கும் முன்னதாக வந்தே மாதரம் என்ற முழக்கம் கொண்ட பாடல் ஒளிபரப்பப்பட்டது, அனைவரும எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

மூத்த நிர்வாகிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக உயர்மட்டக்குழு அறிவித்ததை இந்த கூட்டத்தில் ஏற்று வரவேற்பு தீர்மானம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து மன்மோகன்சிங், சோனியா,ராகுல் சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமது வருங்கால கனவு மற்றும் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ராகுல் மதியம் 3. 30 மணியளவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments