போயஸ் தோட்டத்தில் 'பேக்ஸ்' மிஷின் 'ஜாம்' ? ராஜ்ய சபா எம்.பி.,வேட்பாளர்கள் மீது பறக்கும் புகார்கள்

தூத்துக்குடி : ராஜ்ய சபா எம்.பி., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட மேயர் சசிகலா புஷ்பா, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சின்னத்துரை ஆகியோர் மீது அடுக்கடுக்கான புகார்கள், தூத்துக்குடியில் இருந்து அனுப்பப்படுவதால், போயஸ் தோட்டத்தில் உள்ள 'பேக்ஸ்' மிஷின் 'ஜாம்' ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.


அ.தி.மு.க., சார்பில் ராஜ்ய சபா எம்.பி., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சின்னத்துரை ஆகிய இருவரும், கடந்த சட்டசபை தேர்தலில் ராதாபுரம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள். அந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வாபஸ் பெறப்பட்டது. இதனால், சசிகலா புஷ்பாவும், சின்னத்துரையும் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால், கட்சித்தலைமை உள்ளாட்சி தேர்தலில், தூத்துக்குடி மேயராக சசிகலா புஷ்பாவிற்கும், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக சின்னத்துரைக்கும் வாய்ப்பளித்தது. அவர்கள் இருவரும், தற்போது ராஜ்ய சபா எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பு வெளியான மறு நிமிடத்தில் இருந்து, இருவர் மீதும் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள், கட்சி தலைமைக்கும், முதல்வர் 'ஜெ' க்கும் புகார் மேல் புகார் அனுப்பி வருகின்றனர்.இதில், மேயராக இருந்த சசிகலா புஷ்பா ஊழல் மூலம் பல கோடிகளை சம்பாதித்து விட்டார் என்றும், சின்னத்துரை 2006 முதல் 2011 வரை, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக இருந்த போது 2 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்ததாக, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஊழல் தடுப்பு போலீசார் விசாரிக்கும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இவர்கள் மீதான புகார்களை பட்டியலிட்டு, முதல்வர் பார்வைக்கு போயஸ் கார்டனுக்கு 'பேக்ஸ் ' அனுப்பி வருகின்றனர். இதில் போயஸ் கார்டன் 'பேக்ஸ்' மிஷின் 'ஜாம்' ஆகும் அளவிற்கு புகார்கள் பறந்துள்ளன.பல அதிருப்தி கோஷ்டியினர், சென்னைக்கு நேரில் சென்று கட்சி தலைமையிடத்திலும், சட்டசபை செயலாரிடமும் நேரில் புகார் செய்துள்ளனர்.

Comments