திறந்த புத்தகத்தின் அடையாளம் நெல்சன் மண்டேலா

மக்களால் வெறுக்கக் கற்றுக் கொள்ள முடியும் என்றால்,
அன்பு செலுத்தவும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியும்
                                                                      -  நெல்சன் மண்டேலா

இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர் நெல்சன் மண்டேலா, வார்த்தைகளில் மட்டுமல்ல; செயல்படுத்தியும் காட்டினார். தென் ஆப்பிரிக்காவின் வரலாற்றில்முதல் கறுப்பின அதிபர்என்ற பெருமையும் மண்டேலாவையே சாரும்.

நெல்சன் மண்டேலாவின் போராட்டம் என்பது பல்வேறு வடிவங்களில், பல்வேறு களங்களில் வேறுபட்டு காணப்பட்டது. அதனால் தான், அவரால் உலக மக்கள் அனைவரையும் கவர முடிந்தது மட்டுமல்லாமல், முன்மாதிரியாக இன்றளவும் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

நெல்சன் மண்டேலாவிடமிருந்து பாடம் கற்க வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அது இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல; இன்றைய அரசியல்வாதிகளுக்கும் தான்.

அமைதிவழிப் போராட்டம், இராணுவ ரீதியான போராட்டம், அரசியல் ரீதியான போராட்டம், ஆயுத ரீதியான போராட்டம் என்று, வெள்ளையர்களின் இனவெறிக்கெதிராக ஒரு வலுவான போராட்டத்தைக் நடத்திக் காட்டினார்.

இதனால், அவருக்கு கிடைத்தது 27 வருட சிறைத் தண்டனை. வெள்ளையர்களின் இந்த அநீதிக்கெதிராக அவர் துவண்டுவிட வில்லை. அதை ஒரு சவாலாக எடுத்து போராடினார்

சிறைச்சாலை  எங்களை முடக்கி விடாது என்பதை வெள்ளையர்களுக்கு அறிவிக்கும் விதமாக மாற்றிக் காட்டினார். சிறைச்சாலையின் உள் சித்ரவதைகள், நெருக்கடிகள், அடக்குமுறைகள் என்று தொடர்ந்த சமயத்திலும், சிறையில் இருந்தே சட்ட மேற்படிப்பு, பொருளாதார இயல், வரலாற்று இயல் என பல கல்விகளை கற்றறிந்தார்.

இதன் மூலம் அவரால் ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. அவர் உடனே எதையும் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆட்சியை உடனே கைப்பற்ற வேண்டும்; அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று சிறுதுளிக்கூட நினைக்கவில்லை. அதிகாரமில்லாமல் இருந்தாலும், மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்பினார். அதனால், மக்கள் அவரின் கையில் ஆட்சியை கொடுத்தனர். ஒரு கறுப்பினத்தவரும் அதிபராக முடியும் என்பதை, நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை நிரூபித்துக் காட்டியது.

நெல்சன் மண்டேலா முதல் கறுப்பினத்தை சேர்ந்த அதிபராக 1994ம் ஆண்டு பதவியேற்றார். இவர் 1999 வரை அதிபராக பதவி வகித்தார். அமைதியின் அடையாளமாக உலக மக்களால் போற்றப்பட்டார். இதனால், அமைதிக்கான நோபல் பரிசு 1993ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார். இந்தப் பயணங்கள்நெல்சன் மண்டேலாவைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அவருடைய போராட்டம் என்பது தென் ஆப்பிரிக்காவில் மட்டும் சுருங்கி நிற்காமல், ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் தன்னுடைய குரலை வலிமையாக பதிவு வைத்தார்.

குறிப்பாக, பலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டித்தார். பலஸ்தீன் ஆக்கிரமிப்பு என்பது ஒரு நாட்டின் மீதான துரோகம் என்று விமர்சித்தார். நாட்டின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடிய பல்வேறு தலைவர்களை சந்தித்தார். அதில், குறிப்பிடத்தக்கவர்கள் கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, யாசர் அரஃபாத் ஆகியோர் ஆவர்.

1942ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்த நெல்சன் மண்டேலாவின் அரசியல் வாழ்க்கை என்பது, இன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.

ஏனென்றால், கட்சி ஆரம்பித்த உடனேயே அதிகாரத்தில் அமர வேண்டும்; தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கு, பல கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் பிறகுதான் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்பதை மண்டேலாவின் வாழ்வு தெளிவுபடுத்துகிறது.

54 வருடங்களுக்கு பிறகே அவரால் ஆட்சிக்கு வர முடிந்தது. இந்தப் நீண்ட நெடிய போராட்டத்தின் இடைப்பட்ட காலங்கள்கஷ்டங்களின்மொத்த வடிவம் எனலாம். இதை உணர்ந்து நாமும் நம்முடைய போராட்டத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

NELLAI SALEEM,

Cell - 96772 01727

Comments